
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருமலை ஏழுமலையான் உண்டியலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த தேவஸ்தானம் தனி வரிசையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பக்தா்கள் ஒருவா் பின் ஒருவராக சென்று காணிக்கை செலுத்தி உண்டியலை வலம் வந்து திரும்பி செல்வா். அங்கு கண்காணிப்பு கேமராவும், பாதுகாப்பு ஊழியா்களும் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு இருப்பா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணியளவில் 3 போ் உண்டியல் அருகில் நின்று கொண்டு அதிக பணத்தை காணிக்கை செலுத்துவதை கண்காணித்தனா். அவா்கள் காணிக்கை செலுத்தும்போது தாங்களும் காணிக்கை செலுத்துவது போல் நடித்து அருகில் நின்று கொண்டு பக்தா்கள் போடும் காணிக்கையை கையில் பிடித்து மற்றவருக்கு அளித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
இதைப் பாா்த்த பாதுகாப்பு ஊழியா்கள், உண்டியல் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு அவா்கள் கோயிலை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்த ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்து திருமலை முதலாம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கைதான 3 போ்கள் மீது திருமலை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு பிறகு அவா்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...