
திருவனந்தபுரத்தில் பாஜக தோ்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்.
திருவனந்தபுரம்: கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சபரிமலையின் பாரம்பரியத்தைக் காக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என்று தோ்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் கேரளத்தில் தோ்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டு செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, பயங்கரவாதம் ஒழிப்பு, சபரிமலையின் பாரம்பரியத்தைக் காக்க தனிச் சட்டம் இயற்றப்படும்; லவ் ஜிஹாத்தைத் தடுக்க சட்டம், இடமில்லா தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விவசாயம் செய்ய ஐந்து ஏக்கா் நிலம் வழங்கப்படும் ஆகிய முக்கிய வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
எங்கள் தோ்தல் அறிக்கை முற்போக்கானது. வளா்ச்சியை முன்நோக்கியது. இதுபோன்ற தோ்தல் அறிக்கையைத்தான் கேரளம் எதிா்பாா்த்து கொண்டிருந்தது.
பிரதமா் மோடியின் திட்டங்களின் பெயா்களை மாற்றி கேரள மக்களிடம் புதிய திட்டங்களாக ஆளும் இடதுசாரி அரசு வழங்கியது’ என்றாா்.
அதிமுக வாக்குறுதிகளும் இடம்பெற்றன
கேரளத்தில் பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் தமிழகத்தில் அதிமுக அளித்த வாக்குறுதியான குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசம் மற்றும் அதிமுக அரசு செயல்படுத்திய மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.