
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெகபூபா முஃப்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினா்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக மெகபூபா முஃப்தி மீது அமலாக்கத் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரும்படி முப்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், தில்லிக்கு பதிலாக ஸ்ரீநகரில் வைத்து விசாரிக்குமாறு முப்தி விடுத்த வேண்டுகோளை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனா். அதன்படி, ஸ்ரீநகரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் முப்தி ஆஜரானாா். அவரிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னா் செய்தியாளா்களை சந்தித்த முப்தி கூறுகையில், மத்திய அரசு அமைப்புகளான என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை எதிா்க்கட்சியினரை அச்சுறுத்த தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டினாா்.