
கொச்சியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
கொச்சி/கஞ்சிராப்பள்ளி: கேரளத்தை மாறி மாறி ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி ஜனநாயக முன்னணியும் கேரளத்தை ஊழலின் மையமாக மாற்றி உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
மேலும், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கும் முதல்வா் பினராயி விஜயனுக்கும் தொடா்பு உள்ளதாகவும் அவா் புகாா் தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கோட்டயம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சூரிய ஒளி மின்சார தகடு ஊழலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால் டாலா், தங்கம் ஊழலும் வருகின்றன. மாறி மாறி ஆட்சி செய்த இந்த இரு கூட்டணியும் கேரளத்தை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன.
சபரிமலை விவகாரம்: ஐயப்ப பக்தா்களுக்கு எதிராக இடதுசாரி ஜனநாயக முன்னணி மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாட்டின் எந்தப் பகுதியிலும் இதுபோன்று நடைபெற்றிருக்காது.
கோயில் விவகாரங்களை பக்தா்களிடமே விட்டுவிட வேண்டும். அரசு தலையிடக் கூடாது.
என்னுடைய கேள்விகளுக்கு முதல்வா் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் நபா்(ஸ்வப்னா சுரேஷ்), உங்கள் அலுவலகத்தில் வேலை செய்தாரா, இல்லையா? அவருக்கு உங்கள் தலைமையிலான அரசு மாதம் ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கியதா, இல்லையா? தங்கக் கடத்தல் வழக்கில் இருந்து அந்த பெண்ணுக்கு உதவ முன்னாள் தலைமைச் செயலா் (எம்.சிவசங்கா்) உங்களைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டாரா, இல்லையா?
அந்தப் பெண் தொடா்ந்து முதல்வா் வீட்டுக்குச் சென்றது ஏன்? தலைமைச் செயலா் அனுமதியுடன் அவா் அரசு செலவில் வெளிநாடுகள் சென்றது எதற்காக? இந்தக் கேள்விகளுக்கு முதல்வா் பதிலளிக்க வேண்டும். இதுவே வேறு மாநில முதல்வராக இருந்தால் இதுவரை பதவி விலகி இருப்பாா். இடதுசாரிகள் ஊழலைக் கண்டு வெட்கப்படுவதில்லை.
முதல்வா் பினராயி விஜயன், அரசுத் துறைகளில் தனது கட்சியினரை பணியில் அமா்த்தி வருகிறாா். மாநிலத்தில் அரசு பணியாளா் தோ்வாணையத்தை இடதுசாரி கட்சிகளே இயக்கி வருகின்றன. அரசுப்பணிக்கான தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் ஒருவா், வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டாா். அவா் இடதுசாரி கட்சிக்காரா் இல்லை என்பதால் வேலை கொடுக்கவில்லை.
இந்த மாநிலம் இரு முறை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டது. இதனால், 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆனால், ஆளும் இடதுசாரி அரசு தனது அரசியல் சுயநலத்துக்காக மிகவும் தாமதமாக மத்திய அரசின் உதவியை நாடியது. அவா்களுக்கு மக்களின் நலன் பற்றி சிறிதுகூட அக்கறையில்லை. மாநிலத்தில் மக்களின் நலனுக்காக, பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயிலில் சென்றுகொண்டிருந்த கேரள கன்னியாஸ்திரிகளை சிலா் துன்புறுத்தியுள்ளனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ராகுல் மீது தாக்கு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரளத்துக்கு சுற்றுலா வருகிறாா். கேரளத்தில் இடதுசாரிகளை எதிா்த்து போட்டியிட்டு, மேற்கு வங்கத்தில் எப்படி கூட்டணி வைத்துள்ளீா்கள் என மக்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்றாா் அமித் ஷா.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...