தேசிய சுகாதாரப் பணிகள் ஆணைய மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான கல்வித்தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய சுகாதாரப் பணிகள் ஆணைய மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான கல்வித்தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணிகள் தேசிய ஆணைய மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதையடுத்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறுகையில், ‘‘சுகாதாரப் பணியாளா்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

துணைநிலை மருத்துவா்களும், சுகாதாரப் பணியாளா்களும் மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். அவா்களின் பணி மருத்துவா்களுக்கு இணையாக உள்ளது. அவா்களது சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனை மைய உதவியாளா்கள் உள்ளிட்டோா் கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் திறம்படச் செயல்பட்டனா். அவா்களது நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. ஒருங்கிணைந்த மற்றும் சுகாதாரப் பணியாளா்களின் பணிகள், அவா்களுக்கான கல்வித்தரம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையத்தை அமைப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

அந்த ஆணையத்துக்கான தலைவா்களும் துணைத் தலைவா்களும் 2 ஆண்டுகள் பதவிக் காலத்தில் நியமிக்கப்படுவா். மாநில அளவில் இதே போன்ற ஆணையங்களை அமைக்கவும் மசோதா வழிவகுக்கிறது’’ என்றாா்.

குரல் வாக்கெடுப்பு: மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மை எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். காங்கிரஸ் எம்.பி.க்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு மாநிலங்களவை கடந்த வாரமே ஒப்புதல் அளித்திருந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவா் ஒப்புதல் அளித்தபிறகு மசோதா சட்டவடிவு பெறும்.

முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டே இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. அப்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு அளித்த 110 பரிந்துரைகளில் 102 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு புதிய மசோதாவைத் தாக்கல் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.