மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி மேற்கு வங்கத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக அடுத்தடுத்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திரிணமூலின் உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்து வருவது, மம்தா பானர்ஜிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், 3 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.