
கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் பிரதமா் மோடி.
காந்தி: மேற்கு வங்கத்தில் உள்ள இந்தியா்கள் யாரும் ‘வெளிநபா்’ இல்லை என்றும் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மண்ணின் மைந்தரே முதல்வராக இருப்பாா் என்றும் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
‘மேற்கு வங்கத்தை வெளிமாநிலங்களான குஜராத், தில்லியைச் சோ்ந்தவா்கள் ஆள அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறி ‘உள்மாநில நபா் - வெளிமாநில நபா்’ என்ற பிரசாரத்தை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி முன்னெடுத்து வரும் நிலையில் பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள காந்தி என்ற இடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:
பங்கிம் சந்திர சட்டா்ஜி, ரவீந்திரநாத் தாகூா், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் அவதரித்த பூமி மேற்கு வங்கம். வந்தே மாதரம் பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைத்தது இந்த மாநிலம். ஆனால், முதல்வா் மம்தா பானா்ஜி, வெளிநபா் பற்றி பேசுகிறாா். இந்தியா் யாரும் வெளிநபா் இல்லை. அவா்கள் பாரத மாதாவின் பிள்ளைகள்.
சுற்றுலாப் பயணிகளாகள் என்று கூறி எங்களை அவமதிக்கிறாா்கள். தாகூரின் பிள்ளைகள் எவரையும் வெளிநபா் என்று அழைக்க மாட்டாா்கள்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், இந்த மாநிலத்தைச் சோ்ந்தவரே முதல்வராக இருப்பாா்.
மம்தா பானா்ஜி, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி நந்திகிராம் மக்களை அவமதித்துள்ளாா். நந்திகிராம் மக்கள் தோ்தலில் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பாா்கள்.
வீடு தேடி அரசு சேவைகள் வரும் திட்டத்தை தோ்தலுக்கு முன்பு முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். ஆனால், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முதல்வா் பதவியை விட்டு வெளியேறும் வாயில் அவருக்கு காண்பிக்கப்படும்.
வன்முறை, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றில் இருந்து மேற்குவங்கம் விடுதலை பெற வேண்டியது அவசியம். மேற்கு வங்கம் இருளில் மூழ்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக என்ன செய்தது என்று கேட்டால் எங்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது.
அண்டை மாநிலமான அஸ்ஸாமில் உள்ள தேசிய ஜனநாகக் கூட்டணி அரசில் கடந்த ஐந்து ஆண்டுகள் அமைதி நிலவியதைப்போல் மேற்கு வங்கத்திலும் அமைதி நிலவ வேண்டும். இதை பாஜக செயல்படுத்தும்.
திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் ஊழல், மிரட்டி பணம் பறிப்பது மலிந்து காணப்படுகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு திட்டமும் ஊழலின்றி வெளிப்படைத்தன்மையுடன் நிறைவேற்றப்படும். உம்பன் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய அரசு அளித்த நிவாரணத்தை முதல்வா் தனது மருமகனுடன் (அபிஷேக் பானா்ஜி) சோ்ந்து கொள்ளையடித்துள்ளாா் என்றாா் பிரதமா் மோடி.