வெடிபொருளுடன் காா்: தனது 13 செல்லிடப்பேசிகளில் 5-ஐ அடித்து நொறுக்கிய சச்சின் வஜே

மன்சுக் ஹிரன் உடல் கண்டெடுக்கப்பட்ட மறுநாள், தான் பயன்படுத்தி வந்த 13 செல்லிடப்பேசிகளில் ஐந்தை சச்சின் வஜே அடித்து நொறுக்கியுள்ளார்.
வெடிபொருளுடன் காா்: தனது 13 செல்லிடப்பேசிகளில் 5-ஐ அடித்து நொறுக்கிய சச்சின் வஜே
வெடிபொருளுடன் காா்: தனது 13 செல்லிடப்பேசிகளில் 5-ஐ அடித்து நொறுக்கிய சச்சின் வஜே

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்ட காரின் உரிமையாளராக கருதப்படும் மன்சுக் ஹிரன் உடல் கண்டெடுக்கப்பட்ட மறுநாள், தான் பயன்படுத்தி வந்த 13 செல்லிடப்பேசிகளில் ஐந்தை சச்சின் வஜே அடித்து நொறுக்கியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில், தொடர்புடையவர்களாக இரண்டு காவல்துறை ஆய்வாளர்கள், ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விசாரணைக்கு அழைக்க தேசிய புலனாய்வு அமைப்பு திட்டமிட்டுள்ளது.

முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சச்சின் வஜே, ஹிரனின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு மறுநாள் அதாவது மார்ச் 6-ஆம் தேதி தான் பயன்படுத்தி வந்த அலுவலக செல்லிடப்பேசி உள்பட 5 செல்லிடப்பேசிகளை அடித்து நொறுக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்தான், வஜேவின் அலுவலக செல்லிடப்பேசியில் உள்ள தகவல்களை மீட்க தொழில்நுட்ப நிபுணர் குழுவின் உதவியை நாடியுள்ளது.

கடந்த மாதம் 25-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருளில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அந்தக் காா் தாணேவைச் சோ்ந்த மன்சுக் ஹிரன் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். அதுதொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கடந்த 5-ஆம் தேதி தாணேவின் மும்ப்ரா பகுதியில் உள்ள நீரோடையில் மன்சுக் ஹிரன் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் அந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. ஏற்கெனவே முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், மன்சுக் ஹிரன் மரண வழக்கும் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது: முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் மும்பையின் கலினா பகுதியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. அதுகுறித்து அந்த ஆய்வக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஜெலட்டின் குச்சிகளை முதல்கட்டமாக ஆய்வு செய்ததில் அவற்றில் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. எனினும் அந்தக் குச்சிகள் அதிக சக்தி கொண்டவை அல்ல. அவற்றால் சிறிய அளவிலான குண்டுவெடிப்புதான் நிகழ்ந்திருக்கும். அந்தக் குச்சிகளால் பெரிய சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுபோன்ற ஜெலட்டின் குச்சிகள் கிராமப்புற பகுதிகளில் கிணறு வெட்டுதல், சாலை கட்டுமானப் பணி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும். இதுதொடா்பான அறிக்கை 2 நாள்களில் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

மன்சுக் உடல் உறுப்புகள் ஆய்வு: மன்சுக் ஹிரனின் உடல் உறுப்புகளும் தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவா் இறப்பதற்கு முன்னா் அவருக்கு ஏதேனும் போதைப்பொருள் தரப்பட்டதா என்பதை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com