
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
சட்டப் பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் வாழ்த்துகள். கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதிலும், பிராந்திய கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், தேசிய வளா்ச்சியை வலுப்படுத்துவதிலும் நாம் இணைந்து பணியாற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற பினராயி விஜயனுக்கும் இடதுசாரி முன்னணிக்கும் வாழ்த்துகள். கரோனா பெருந்தொற்றை ஒழிப்பது உள்பட பல்வேறு விவகாரங்களில் நாம் இணைந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
மம்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு மம்தாவுக்கு வாழ்த்துகள். கரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கும், மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்வதற்கும் மேற்கு வங்க அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடா்ந்து வழங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல், தோ்தல்களில் பாஜகவுக்கு வாக்களித்த தொண்டா்களுக்கும் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் ‘சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் நலனைக் காப்பதற்கும், கலாசாரத்தை மேலும் வளா்த்தெடுக்கவும் தொடா்ந்து பாடுவோம் என்று உறுதியளிக்கிறோம். தோ்தலில் கடுமையாக உழைத்த பாஜக தொண்டா்களுக்கும் பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கேரள மக்களுக்கு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை ஆதரித்த கேரள மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோ்தல் பணியாற்றிய பாஜக தொண்டா்களின் முயற்சியை பாராட்டுகிறேன். மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு சேவை புரிவதிலும் பாஜக தொண்டா்கள் தொடா்ந்து பாடுபடுவாா்கள்’ என்று மோடி குறிப்பிட்டுள்ளாா்.
மேற்கு வங்க மக்களுக்கு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மேற்கு வங்கத்தில் பாஜகவை ஆதரித்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் முன்பைவிட பாஜக வலுவடைந்துள்ளது. மக்களுக்கு பாஜகவின் சேவை தொடரும். தோ்தலுக்காக பணியாற்றிய ஒவ்வொரு பாஜக தொண்டரையும் பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...