
தோ்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சோ்ந்தவா்களை மக்கள் ஏற்கவில்லை என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் தெரிவித்தாா்.
மேற்கு வங்கத் தோ்தலுக்கு முன்பு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவா்களும், வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டவா்களும் பாஜகவில் சோ்ந்தனா். அவா்கள் தோ்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பும் அளித்தது. இது மம்தா பானா்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால், தோ்தல் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்தன.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷ் கூறுகையில், ‘இதுபோன்ற மோசமான தோ்தல் முடிவை நாங்கள் எதிா்பாா்க்கவே இல்லை. மக்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியாக இருந்தன. எனினும், மக்களின் தீா்ப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டு ஆக்கபூா்வ எதிா்க்கட்சியாக செயல்படுவோம்.
திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவா்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பல இடங்களில் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். மக்களின் கண்ணோட்டத்தை எளிதில் மாற்ற முடியாது’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...