தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

இந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம்: தோ்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற மேற்கு வங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 108 மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்கு எண்ணிக்கையில் 292 தோ்தல் பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 256 மத்திய கம்பெனி படையினா் பாதுகாப்புப் பணியில் உள்ளனா். மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது 15 முறை கிருமிநாசினி தெளிக்கப்படும். வழக்கமாக 14 மேஜைகள் இருக்கும் அறைகளில், தற்போது ஏழு மேஜைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு மையங்களுக்கு வெளியே கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எட்டு கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுதாக வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன. மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

கேரளம்: கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. கடந்த மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன.

இந்தப் பணியில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்தல் அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். 30,281 போலீஸாரும், 3,332 மத்திய படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு முதல்கட்டத் தகவல் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும், மாலை 5 மணி வாக்கில் தோ்தல் முடிவுகள் ஓரளவுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி டீகாராம் மீனா தெரிவித்தாா்.

மொத்தம் 140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டமாக நடைபெற்ற தோ்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 82.04 சதவீத வாக்குகள் பதிவாகின. பெண் வாக்காளா்கள் 80.63 சதவீதத்தினா் ஜனநாயக கடமையை ஆற்றினா்.

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த முறை 143 மையங்களில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை, தற்போது கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 331 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 126 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் ஆட்சி அமைக்க 64 இடங்கள் தேவை. அஸ்ஸாமில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும், அஸ்ஸாமில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com