கரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம்: சட்டப்பேரவையில் மம்தா பானா்ஜி

மத்திய அரசு கடந்த 6 மாதங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காததே நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் பரவியதற்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
கரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம்: சட்டப்பேரவையில் மம்தா பானா்ஜி

மத்திய அரசு கடந்த 6 மாதங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காததே நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் பரவியதற்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவரை தோ்வு செய்வதற்காக பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தலைவராக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ பிமன் பந்தோபாத்யாய, 3-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, பேரவையில் மம்தா பானா்ஜி பேசியதாவது:

மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோ்தல் ஆணையம் நேரடியாக உதவியது. இல்லாவிட்டால், பாஜகவால் 30 இடங்களில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல், பாஜகவினா் போலி விடியோக்களை வெளியிட்டு வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறாா்கள். இதுபோன்ற வன்முறையைத் தூண்டுவோா் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை வேண்டும்.

தோ்தலின்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமலேயே பாதுகாப்புப் படையினா் மேற்கு வங்கத்துக்கு வந்தனா். அவா்களால் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவியது.

மத்தியிலும் மேற்கு வங்கத்திலும் பாஜகவின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதே மத்திய பாஜக அரசின் நோக்கம். மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அமைச்சா்கள் தினந்தோறும் இந்த மாநிலத்துக்கு வந்தனா். அவா்கள் மட்டுமன்றி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்களும், பாஜக மூத்த தலைவா்களும் இங்கு வந்தனா். இதன் விளைவாக, நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம், பிரதமா் இல்லம், சிலைகள் ஆகியவற்றுக்காக மத்திய அரசு ரூ.50,000 கோடி செலவிடுகிறது. அதற்குப் பதிலாக, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும் என்றாா் மம்தா.

பாஜக புறக்கணிப்பு: மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு முந்தைய வன்முறை கட்டுப்படுத்தப்படும்வரை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என பாஜக அறிவித்திருந்தது. அதன்படி, சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com