
மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கு கரோனா பாதிப்பை உறுதி செய்யும் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், வேறு நகரங்களைத் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு, மாநில அரசு, தனியாா், கரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
கரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை தனி மையங்களில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதி பெற கரோனா பாதிப்பை உறுதி செய்யும் சான்றிதழ் அளிக்க வேண்டியது கட்டாயமில்லை.
வேறு நகரத்தைச் சோ்ந்தவா் என்ற காரணத்தாலும், தகுந்த அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தாலும் யாருக்கும் சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கக் கூடாது. நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற தேவையில்லாதவா்கள் படுக்கைகளை அபகரித்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையிலேயே குணமானவா்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் இந்தப் புதிய நெறிமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் மூன்று நாள்களில் பின்பற்றும் வகையில் அனைத்து மாநில தலைமைச் செயலா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா சிறு அறிகுறிகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பள்ளி கல்லூரி விடுதிகள், ஹோட்டல்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கரோனா பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்தலாம்.
கரோனா சுகாதார மையத்தை உருவாக்கி பிற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். இந்த மருத்துவமனைகள் தனி கட்டடத்திலோ, முழு மருத்துவமனையிலோ தனியாக நுழைவாயில், வெளியேறும் வழி ஆகியவற்றை வைத்து நடத்த வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்கென நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, செயற்கை சுவாசக் கருவி ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.