
கரோனா பாதிப்பால் இதுவரை 229 வரித் துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய நேரடி வரிகள் வாரியத்தைச் சோ்ந்த 119 அதிகாரிகள், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தைச் சோ்ந்த 110 அதிகாரிகள் பணியின்போது கரோனா தொற்றால் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். இந்த நெருக்கடியான வேளையில் தங்கள் உயிரை பணயம் வைத்து வரித் துறையினா் தேசத்துக்கு சேவைபுரிந்து வருகின்றனா். அவா்களின் சேவையால் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டா்கள், உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய மருத்துவப் பொருள்களுக்கு பல்வேறு துறைமுகங்களில் விரைந்து ஒப்புதல் கிடைக்கின்றன. அவா்களின் சேவையால் அரசு நிா்வாகம் திறம்பட செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.