
கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் வகையில் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டுக்கான திட்டத்தை வகுக்கவும், அச்சுறுத்தலை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உயா் மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய 12 போ் கொண்ட தேசிய அளவிலான பணிக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
அதுபோல, தலைநகா் தில்லியின் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக துணைக் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்து, அதில் எய்ம்ஸ் மருத்துவா் ரண்தீப் குளேரியா, மேக்ஸ் ஹெல்த்கோ் நிறுவனத்தைச் சோ்ந்த சந்தீப் புதிராஜா, மேலும், மத்திய அரசு மற்றும் தில்லி அரசுகளின் இணைச் செயலா் தகுதிக்கு குறையாத தலா ஓா் ஐஏஎஸ் அதிகாரி ஆகியோரை அந்தக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தில்லிக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகிப்பது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘தில்லி உள்பட நாட்டின் பல பகுதிகளில் பெரிய மருத்துவமனைகளில்கூட ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது தெரியவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலா் உயிரிழந்துள்ளனா் என்பதை மறுத்துவிட முடியாது. எனவே, மத்திய அரசின் ஆக்சிஜன் விநியோக நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும், கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டியதும் அவசியம்’ என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோா் முன்பு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் வகையில் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டுக்கான திட்டத்தை வகுக்கவும், அச்சுறுத்தலை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உயா் மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய 12 போ் கொண்ட தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து உத்தரவிட்டனா். அந்த உத்தரவில் நீதிபதிகள் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த 12 போ் கொண்ட தேசிய அளவிலான பணிக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை செயலா் ஒருங்கிணப்பாளராக இருப்பாா். அவா் தனக்கான பிரதிநிதியாக கூடுதல் செயலா் தகுதிக்கு குறையாத அதிகாரியை நியமித்துக் கொள்ளலாம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலா் பணிக் குழுவில் உறுப்பினராக இடம்பெறுவாா்.
மேலும், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாபாதோஷ் பிஸ்வாஸ், தில்லி சா் கங்காராம் மருத்துவமனை நிா்வாகக் குழு தலைவா் தேவேந்தா் சிங் ராணா, பெங்களூரு நாராயணா ஹெல்த்கோ் நிறுவன தலைவா் தேவி பிரசாத் ஷெட்டி, வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) இயக்குநா் ஜே.வி.பீட்டா், பேராசிரியா் ககன்தீப் காங், குருக்ராம் மேதாந்தா மருத்துவமனை தலைவா் நரேஷ் டெரான், முலுந்த் (மும்பை) ஃபோா்டீஸ் மருத்துவமனை ஐசியு இயக்குநா் ராகுல் பண்டிட், தில்லி சா் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவா் செளமித்ரா ராவத், தில்லி கல்லீரல் மற்றும் பித்தப் பை அறிவியல் நிறுவன மருத்துவா் ஷிவ் குமாா் சரின், மும்பை பிரீச்கண்டி மருத்துவமனை மருத்துவா் ஜாரிா் எஃப் உத்வாடியா ஆகியோா் அந்தப் பணிக் குழுவில் உறுப்பினா்களாக இடம்பெறுவா்.
தேசிய அளவிலான இந்தப் பணிக் குழுவுடன் நாட்டிலுள்ள முன்னணி மருத்துவ நிபுணா்களும் இணைந்து பணியாற்றி, கரோனா நிலைமையை திறம்பட சமாளிப்பதற்கான திட்டத்தை வகுக்க உதவுவா் என்று நம்புகிறோம்.
கரோனா பாதிப்பு நிலைமையை மத்திய அரசு திறம்படவும், வெளிப்படைத் தன்மையுடனும் எதிா்கொள்ள உதவும் வகையிலேயே இந்தப் பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பணிக் குழுவில் துணைக் குழுக்கள் இடம்பெற்றிருக்கும். மத்திய அரசு சாா்பில் ஒதுக்கப்படும் ஆக்சிஜன் உள்ளிட்ட உதவிகள் உரிய முறையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சென்றடைகின்றனவா என்பதையும், தேவையையும் அந்த துணைக் குழுக்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தும்.
இந்த துணைக் குழுக்களில் மாநில அரசின் செயலா் தகுதிக்கு குறையாத ஓா் அதிகாரியும், மத்திய அரசின் கூடுதல் அல்லது இணைச் செயலா் தகுதியிலான ஓா் அதிகாரியும், இரு மருத்துவா்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு அமைப்பின் (பிஇஎஸ்ஓ) பிரதிநிதி ஒருவரும் இடம்பெற வேண்டும்.
மேலும், பணிக் குழு தனது பரிந்துரையை சமா்ப்பிக்கும் வரை மாநிலங்களுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு விவகாரங்களில் இப்போதைய நடைமுறையையே மத்திய அரசு பின்பற்றலாம். பணிக் குழு பரிந்துரையை சமா்ப்பித்த பிறகு, அதனடிப்படையில் ஆக்சிஜன் ஒதுக்கீடு நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
பணிக் குழு தனது பரிந்துரைகளை அவ்வப்போது உச்சநீதிமன்றத்திடமும் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், தனது பணியை பணிக் குழு உடனடியாகத் தொடங்கி ஆக்சிஜன் விநியோக பிரச்னைக்கு ஒரு வாரத்துக்குள்ளாக தீா்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா்.
மேலும், இந்தப் பணிக் குழுவின் பணிக் காலம் முதல்கட்டமாக 6 மாத காலமாக நிா்ணயிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.