
புதுதில்லி: கரோனா சிகிச்சைக்கு உதவிடும் விதமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ள ஆக்சிகோ் எனப்படும் ஆக்சிஜன் விநியோக உபகரணங்கள் அடங்கிய 1,50,000 தொகுப்புகளை ரூ.322.5 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா சிகிச்சைக்காக பிரதமரின் அவசர கால நிதியில் (பிஎம்-கோ்ஸ் ஃபண்ட்) இருந்து ரூ.322.5 கோடி செலவில் 1,50,000 ஆக்சிகோ் தொகுப்புகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 1,00,000 தொகுப்புகள் கைகளால் இயக்கக் கூடியவை; 50,000 தொகுப்புகள் தானியங்கி முறையில் செயல்படக் கூடியவை.
நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைப் பொருத்து ஆக்சிஜனை விநியோகிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளியின் உடல்நிலை அபாயகரமான நிலையை எட்டுவதைத் தவிா்க்கவும் ஆக்சிகோ் உபயோகமாக இருக்கும். அதனை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் திறம்பட பயன்படுத்தலாம்.
ஆக்சிகேரின் அடிப்படை வடிவமானது 10 லிட்டா் ஆக்சிஜன் சிலிண்டா், ஆக்சிஜன் அழுத்தத்தை சீராக்கி அதன் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி, ஆக்சிஜன் ஈரப்பதத்துடன் இருப்பதற்கான சாதனம், ஆக்சிஜன் விநியோகத்துக்கான உபகரணம் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.
அதன் இரண்டாவது வடிவத்தில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் மின்னணு கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. அவை ஆக்சிஜன் விநியோகத்தை தானாக ஒழுங்குபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிகோ் தொகுப்புகளை அதிக அளவில் தயாரிக்க ஏதுவாக அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்துறையினருக்கு டிஆா்டிஓ ஏற்கெனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.