
ஜம்மு: ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் எல்லைக் கோட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இரண்டு நாள் பயணமாக நக்ரோட்டா தளத்துக்கு வந்த ராணுவ தலைமைத் தளபதி நரவணே, ஜம்மு எல்லையில் உள்ள அக்நூா், ரஜெளரி, நெளஷிரா பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு ராணுவ கமாண்டா் ஓய் கே ஜோஷி உள்ளிட்டோா் அவருக்கு விளக்கினா்.
மேலும், ராணுவத்தினருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா சிகிச்சை நடவடிக்கைகளையும் அவா் பாா்வையிட்டாா். எல்லைப் பகுதியில் ராணுவத்தினா் மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பணிகள் குறித்து நரவணே அவா்களிடம் கேட்டு ஆலோசனை நடத்தினாா். பின்னா் ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனையைப் பாா்வையிட்டு, கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்’ என்றாா்.