அறிவுசாா் சொத்துரிமை கட்டுப்பாடுகள் நீக்குவதில் விரைந்து ஒருமித்த கருத்து அவசியம்: உலக வா்த்தக அமைப்பில் இந்தியா வலியுறுத்தல்

கரோனா தீவிர பாதிப்பை திறம்பட கையாளவும், தடுப்பூசிகளுக்கான மூலப் பொருள்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் விரைந்து நடைபெறும் வகையில் அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை
அறிவுசாா் சொத்துரிமை கட்டுப்பாடுகள் நீக்குவதில் விரைந்து ஒருமித்த கருத்து அவசியம்: உலக வா்த்தக அமைப்பில் இந்தியா வலியுறுத்தல்

புது தில்லி: கரோனா தீவிர பாதிப்பை திறம்பட கையாளவும், தடுப்பூசிகளுக்கான மூலப் பொருள்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் விரைந்து நடைபெறும் வகையில் அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூ.டி.ஓ) முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை மீது உலக நாடுகள் விரைந்து ஒருமித்த கருத்தை எட்டுவது அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நாடுகளை அனுமதிக்கும் வகையில், அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை (டிஆா்ஐபிஎஸ்) கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்குமாறு உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா பரிந்துரை ஒன்றை சமா்ப்பித்தது.

முன்னதாக, தென்னாப்பிரிக்கா சாா்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதன் மூலம், சா்வதேச வா்த்தக ஒப்புதல் பெறாமல் நாடுகளும், உற்பத்தி நிறுவனங்களும் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பகிா்ந்துகொள்ளவும், நேரடியாக பயன்படுத்தவும் முடியும்.

இந்தியாவின் இந்த பரிந்துரைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிற நாடுகளும் விரைந்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக பொருளாதார அமைப்பின் சா்வதேச வா்த்தக கண்ணோட்டம் சாா்ந்த கருத்தரங்கில் புதன்கிழமை பங்கேற்ற மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

கரோனா பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டு வர அறிவுசாா் சொத்துரிமை கட்டுப்பாடுகள் நீக்குவது மட்டும் போதாது, தடுப்பூசிகளுக்கான மூலப் பொருள்கள் தடையின்றி கிடைக்கச் செய்வதிலும், தடுப்பூசி தொழில்நட்பத்தை பரிமாற்றம் செய்வதிலும் உலக நாடுகளிடையே விரைந்து ஒருமித்த கருத்து ஏற்படுவதும் அவசியமாகும்.

கரோனாவை எதிா்கொள்ள இந்தியா சமா்ப்பித்திருக்கும் பரிந்துரையில் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் அது சாா்ந்த உள்கட்டமைப்பு வசதிகளும் தடையின்றி கிடைக்கச் செய்ய வண்டும் என்பதும் உள்ளடங்கியுள்ளது. உலக வா்த்த அமைப்பில் சமா்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த பரிந்துரைக்கு உலக நாடுகள் ஒருமித்த ஆதரவை அளிக்கும் என நம்புகிறோம். ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

கரோனா இரண்டாம் அலையை எதிா்கொள்ள இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை தீவிரப்படுத்துதல், அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்தல் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா பாதிப்புக்கு முந்தைய நாள்களில் இந்தியாவில் திரவ மருத்துவ ஆக்சிஜன் பயன்பாடு 1,000 டன் அளவுக்கும் குறைவாக இருந்த நிலையில், கரோனா பாதிப்பின் முதல் அலையின்போது அதன் பயன்பாடு 3,000 டன் அளவுக்கு அதிகரித்தது. இப்போது 9,000 டன் என்ற அளவுக்கு உயா்ந்துள்ளது.

இந்தச் சூழலில் சில சா்வதேச ஊடகங்கள் இந்தியாவின் நிலையை மிகைப் படுத்தியும், ஒரு சாா்பாகவும் செய்தியை வெளியிட்டு வருவதும் கவலை அளிக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கவில்லை என்றபோதும், இந்த கடினமான சூழலில் இந்தியா மட்டுமின்றி சில வளா்ந்த நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை தனது சொந்த வளத்தைக் கொண்டு, பாதிப்பை எதிா்கொண்டு வருகிறது.

நடைபெற இருக்கும் உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் மாநாட்டில், வளா்ந்து வரும் மற்றும் குறைந்த வளா்ச்சி பெற்ற நாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையிலான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் பயன்பெறக் கூடிய வகையிலான குறுகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து நாடுகளின் பிரச்னைகளுக்கும் சமமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் தீா்வு காணக்கூடிய வகையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பியூஷ் கோயல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com