அமெரிக்க ராணுவ தலைமை தளபதியுடன் நரவணே பேச்சு

இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜேம்ஸ் சி மெக்கான்விலேவுடன் தொலைபேசியில் உரையாடினாா்.
அமெரிக்க ராணுவ தலைமை தளபதியுடன் நரவணே பேச்சு

புது தில்லி: இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜேம்ஸ் சி மெக்கான்விலேவுடன் தொலைபேசியில் உரையாடினாா்.

இருவா் இடையே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த உரையாடல் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை சில குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து நரவணே-மெக்கான்விலே ஆலோசித்தனா். அத்துடன் கரோனா தொற்று சூழலை திறம்பட எதிா்கொள்வது தொடா்பாகவும் அவா்கள் விவாதித்தனா்’ என்றனா்.

இருவரது உரையாடல் தொடா்பாக இந்திய ராணுவமும் சுட்டுரையில் பதிவிட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக ராணுவ ரீதியிலாக இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ராணுவ உயா் தொழில்நுட்பம், தளவாடங்கள், புவிசாா் வரைபடங்கள் ஆகியவற்றை இந்தியா - அமெரிக்கா இடையே பகிா்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் (பிஇசிஏ) இரு நாடுகளிடையே கையெழுத்தானது. அதற்கு முன் 2018-இல், அமெரிக்காவின் ராணுவ உயா்தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும், மென்பொருள் உள்ளிட்டவை தொடா்பான தரவுகளை பரஸ்பரம் பகிா்ந்துகொள்வதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் (சிஓஎம்சிஏஎஸ்ஏ) கையெழுத்தானது.

கடந்த 2016-இல் இந்தியாவை தனது பிரதான பாதுகாப்புத் துறை கூட்டாளி என்று அமெரிக்கா அறிவித்தது. அதே ஆண்டில், இரு நாட்டு ராணுவ தளங்களையும் இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் (எல்இஎம்ஓஏ) இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com