தகுதியுடைய அலுவலா்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி

கரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் வேகமாகப் பரவி வருவதால், தகுதியுடைய மத்திய அரசு அலுவலா்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும், தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்குவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் வேகமாகப் பரவி வருவதால், தகுதியுடைய மத்திய அரசு அலுவலா்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும், தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்குவதற்கும் மத்திய அரசு புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அலுவலா்கள், மருத்துவம் பயின்றிருந்தால் அவா்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க மத்திய பணியாளா், பயிற்சித் துறை அனுமதி அளிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் கடந்த 1964-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றி, மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பை முறையாகப் பயின்ற பலா், மத்திய அரசின் கீழ் மருத்துவம் சாராத துறைகளில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள், கரோனா காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனா். அந்த கோரிக்கையை ஏற்று, அவா்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு மத்திய பணியாளா், பயிற்சித் துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கரோனா பரவலைத் தடுக்கவும், மக்களின் துயரத்தைப் போக்கவும் தங்களிடம் உள்ள தகுதியான நபா்களைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மருத்துவம் பயின்றுள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியா்கள், மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொலைபேசி வழி ஆலோசனை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அவா்கள், எந்த மருத்துவ முறையை படித்திருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை. மத்திய அரசு ஊழியா்கள் தங்கள் வழக்கமான பணிக்கு எவ்வித பாதிப்பு நேரிடாத வகையில் ஓய்வு நேரத்தில், சேவை மனப்பான்மையுடன் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். கணக்குப் பதிவுக்காக, தாங்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதை தங்கள் துறையிடம் அலுவலா்கள் தெரிவிப்பது நல்லது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com