
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவசமாக இணைய வசதி அளிப்பதற்கான வைஃபை சேவை திட்டம் 6,000 ரயில் நிலையங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இது தொடா்பாக ரயில்வே நிா்வாகம் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக ரயில் நிலையங்களில் இலவச வைஃபை திட்டம் தொடங்கப்பட்டது. ரயில்டெல் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கூகுள், டாட், டாடா அறக்கட்டளை ஆகியவை பின்னா் இத்திட்டத்தில் இணைந்தன. இதன் மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முக்கியமாக கிராமப்புற மக்களுக்கும் இணையதள சேவையைக் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேற்கு வங்கத்தில் மிதுனபுரி ரயில் நிலைத்தில் வைஃபை வசதி அமைத்தபோது 5,000 என்ற அளவு எட்டப்பட்டது. இப்போது ஒடிஸா மாநிலம் ஜாரபாதா ரயில் நிலையத்திலும், ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாத் ரயில் நிலையத்திலும் சனிக்கிழமை இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை என்ற மைல்கல் எட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.