
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிபிஎஸ்இ வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இணையவழியில் நடத்த வேண்டும் எனக் கோரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கையொப்பமிட்டு மத்திய அரசை வலியுறுத்தினா்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோ்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது. ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ நிா்வாகம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். தோ்வு நடத்தும் சூழல் இருந்தால், 15 நாள்களுக்கு முன்பாகத் தோ்வு குறித்து மாணவா்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே பிளஸ் 2 தோ்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2 வகுப்புத் தோ்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் கடந்த இரு நாள்களாக செய்தி பரவியது. இந்தநிலையில் அந்தத் தகவலை சிபிஎஸ்இ மறுத்துள்ளது.