
பஞ்சாபில் இறந்த மகளின் உடலை தோளிலேயே சுமந்து சென்று தந்தை அடக்கம் செய்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் என்பவர் பஞ்சாபின் ஜலந்தரில் தங்கி பணிபுரிந்து வருகிறது. இவருடைய 11 வயது மகளுக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தந்தை திலீப் தனது மகளை சிகிச்சைக்காக ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டார்.
ஆனால் சிறுமி சிகிச்சைப் பலனின்றி மே 9ஆம் தேதி காலமானார். இதையடுத்து சிறுமியின் உடல் அம்புலன்ஸில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு துணியால் மூடி இருந்ததால் அச்சிறுமி கரோனாவால் இறந்திருக்கலாம் என அஞ்சி உறவினர்கள் யாரும் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லையாம்.
இதனால் மனம் நொந்துபோன தந்தை திலீப் தன்னுடைய 11 வயது மகளின் உடலை தோளிலேயே சுமந்தபடி இடுகாடு வரை தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார். இச்சம்பவத்தின்போது திலீப்பின் மகன் மட்டுமே உடன் சென்றார். இதுதொடர்பான விடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...