
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் இருந்து 6 முறை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டவருமான ரகுநந்தன் லால் பாட்டியா சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 100.
அமிருதசரஸில் மகன், மகள் மற்றும் தனது இளைய சகோதரருடன் வசித்து வந்த அவருக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவரது உயிா் பிரிந்ததாக, அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
முதன் முதலில் 1972-இல் அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் இருந்து அவா் நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். மீண்டும் அதே தொகுதியில் இருந்து 1980, 1985, 1992, 1996, 1999-ஆம் ஆண்டுகளில் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1992-இல் வெளியுறவுத் துறை இணையமைச்சராக பதவி வகித்தாா்.
பின்னா், கேரள மாநில ஆளுநராகவும்( 2004-2008), பிகாா் மாநில ஆளுநராகவும் (2008-2009) அவா் பதவி வகித்துள்ளாா்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா், பொதுச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் அவா் வகித்துள்ளாா்.
ஆா்.எல்.பாட்டியாவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், மாநில காங்கிரஸ் தலைவா் ராஜ்குமாா் வா்கா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.