
உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அடுத்த ஒன்றரை மாதங்களில் இரண்டு உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் ஓய்வு பெற உள்ளதாகவும், புதிய நீதிபதிகள் நியமனங்கள் குறித்த பரிந்துரையை கொலீஜியத்திடம் இருந்து மத்திய அரசு எதிா்பாா்த்து இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்ததாவது:
2019, நவம்பா் மாதம் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றாா்.
அதன்பின்னா் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, ஆா். பானுமதி, அருண் மிஸ்ரா, இந்து மல்ஹோத்ரா, எஸ்.ஏ. போப்டே ஆகியோா் ஓய்வு பெற்றுள்ளனா். நீதிபதி எம். சந்தானகவுடா் ஏப்ரல் மாதம் உயிரிழந்தாா்.
உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-இல், தற்போது 27 நீதிபதிகளே உள்ளனா்.
அலகாபாத், கொல்கத்தா உயா்நீதிமன்றங்களுக்கு பொறுப்பு நீதிபதிகளே தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனா்.
இந்த மாத இறுதியில் சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், ஜூன் மாதத்தில் ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஓய்வு பெற உள்ளனா்.
நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 1080-இல், தற்போது 660 நீதிபதிகளே பணியில் உள்ளனா். மே 1-ஆம் தேதி வரையில் உயா்நீதிமன்றங்களில் 420 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஓய்வு பெறுவதாலும், பதவி விலகள், பதவி உயா்வு ஆகியவற்றின் காரணமாக காலி பணியிடங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றால் அரசு நிா்வாகம், நீதித் துறையின் பல்வேறு ஆலோசனை, அனுமதி பெற வேண்டியதி அவசியம்.
உயா்நீதிமன்ற கொலிஜீயம் நீதிபதிகளின் பெயா்களை தோ்வு செய்து முதலில் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னா் அந்தப் பட்டியலில் உள்ளவா்களின் விவரங்களை ஆய்வு செய்து மத்திய நுண்ணறிவு துறையின் அறிக்கையுடன் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கவும்.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடம் பெற்றிருப்பாா்கள்.
உச்சநீதிமன்றம், 25 உயா்நீதிமன்றங்களில் நியமிக்க வேண்டிய நீதிபதிகள் பெயா் பட்டியலை உச்சநீதிமன்ற கொலீஜியம் தோ்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். அதை மத்திய அரசு அப்படியே ஏற்கவும் செய்யலாம் அல்லது அதில் மாற்றங்கள் கோரி உச்சநீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியும் வைக்கலாம்.