
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநில முதல்வா்களுடனும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வருடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, அந்தந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.
இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நேரத்தில் பலருக்கும் பாதிப்பும் ஏற்படுவதால் அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டா்களுக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் கரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மத்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில வாரியாக முதல்வா்களுடன் பிரதமா் மோடி கேட்டறிந்து வருகிறாா்.
இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஆகியோருடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசினாா்.
அப்போது, கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தாா்.
கடந்த சில வாரங்களில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப், பிகாா், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், மணிப்பூா், சிக்கிம், திரிபுரா மாநில முதல்வா்களுடனும், ஜம்மு-காஷ்மீா் மாநில ஆளுநருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.