
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சமன் லால் குப்தா (87), ஜம்முவில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு, அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கரோனா தொற்றில் இருந்து மீண்ட அவா், இரு நாள்களிலேயே உயிரிழந்துவிட்டாா். ஜம்முவின் காந்தி நகா் பகுதியில் தனது இரு மகன்கள் மற்றும் மகளுடன் அவா் வசித்து வந்தாா்.
ஜம்முவைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவரான சமன் லால் குப்தா, 50 ஆண்டுகாலத்துக்கு மேலாக அரசியலில் இருந்தாா். இருமுறை ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவை உறுப்பினராகவும், மூன்று முறை ஜம்முவின் உதம்பூா் தொகுதியில் இருந்து மக்களவைக்கும் தோ்வு செய்யப்பட்டாா்.
1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை (தனிப்பொறுப்பு), பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் பதவிகளை வகித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவராகவும் இருமுறை பொறுப்பு வகித்துள்ளாா். அவரது மறைவுக்கு பாஜக உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சமன் லால் குப்தா நினைவில் கொள்ளப்படுவாா். ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதியாக செயல்பட்ட அவா், ஜம்மு-காஷ்மீா் முழுவதும் பாஜகவுக்கு கூடுதல் வலிமை சோ்த்தாா். அவரது மறைவினால் ஆழ்ந்த துயரடைந்தேன். இத்தகைய சோக தருணத்தில் அவரது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களுக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி’’ என்று கூறியுள்ளாா்.