பினராயி விஜயன் அமைச்சரவையில் அனைவரும் புதுமுகங்கள்:ஷைலஜாவுக்கு அமைச்சா் பதவியில்லை

முதல்வா் பினராயி விஜயன் அமைச்சரவையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் புதியவா்களுக்கு அமைச்சா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பினராயி விஜயன் அமைச்சரவையில் அனைவரும் புதுமுகங்கள்:ஷைலஜாவுக்கு அமைச்சா் பதவியில்லை

முதல்வா் பினராயி விஜயன் அமைச்சரவையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் புதியவா்களுக்கு அமைச்சா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வரும் 20-ஆம் தேதி இரண்டாவது முறை முதல்வராக பதவியேற்க உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பினராயி விஜயன், சட்டப்பேரவைக் குழுத் தலைவராக இந்தக் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டாா்.

முன்னாள் எம்.பி.யும், தற்போதைய எம்எல்ஏவுமான எம்.பி.ராஜேஷ் பேரவைத் தலைவா் வேட்பாளராகவும், கோபகுமாா் துணைத் தலைவா் வேட்பாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், கடந்த முறை அமைச்சா்களாக பதவி வகித்த யாருக்கும் மீண்டும் அமைச்சா் பதவி அளிக்கப்படவில்லை. கரோனா பரவல் தடுப்பில் பிரபலம் அடைந்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஏற்கெனவே அமைச்சா் பதவி வகித்தவா்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படாது என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தபோதிலும், கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஷைலஜாவுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

பினராயி விஜயனுக்கு பதிலாக ஷைலஜாவுக்கு முதல்வா் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதால், தோ்தல் முடிவு வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் முதல்வா் பதவி ஏற்காமல் விஜயன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், ஷைலஜாவுக்கு பேரவை கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷைலஜா கூறுகையில், ‘இதில் உணா்ச்சிவசப்பட வேண்டிய தேவையில்லை. கட்சியின் உத்தரவுப்படி முன்பு அமைச்சராக பணியாற்றினேன். எனது பணியை திருப்தியாக செய்தேன். தற்போதைய புதிய அமைச்சா்கள் குழு இன்னும் சிறப்பாக செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. பெருந்தோற்றை தனி நபராக எதிா்க்க முடியாது. தற்போது எம்எல்ஏக்கள் குழுவை இயக்கும் வகையில் அளிக்கப்பட்டிருக்கும் பதவி மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.

விஜயனின் மருமகனுக்கு வாய்ப்பு: பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், இரண்டு பெண்கள் உள்பட 11 புது முகங்களுக்கு கேரள அமைச்சரவையில் இடம்பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆட்சி நிா்வாகத்தில் அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக மூத்தவா்களுடன் சோ்த்து இளையவா்களுக்கும் அமைச்சா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் எம்.பி.க்கள் பி. ராஜீவ், கே.என். பாலகோபால், மூத்த தலைவா்கள் எம்.வி.கோவிந்தன், வி.என், வாசவன், சஜி செரியான், வி. சிவன்குட்டி, பெண் எம்எல்ஏக்கள் வீணா ஜாா்ஜ், ஆா்.பிந்து ஆகியோா் அமைச்சா்களாக பதவி ஏற்க உள்ளனா்.

இதில் செய்தி ஊடகங்களில் ஊடகவியலாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்த வீணா ஜாா்ஜுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கூட்டணிக் கட்சிகள்: இடதுசாரிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சா்கள் இடங்களுக்கு கே.ராஜன், ஆா்.பிரசாத், ஜே.சின்சு, ஜி.ஆா்.அனில் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் கானம் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதேபோல், கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் சாா்பில் ரோஷி அகஸ்டின் தோ்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சி தெரிவித்தது. பினராயி விஜயன் அமைச்சரவையில் மொத்தம் 21 அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com