திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வதை ஏற்க முடியாது: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்

திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழ்வது (லிவ்-இன்), ஒழுக்க நெறிமுறைகள் அடிப்படையிலும், சமூகரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வதை ஏற்க முடியாது: பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம்

திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழ்வது (லிவ்-இன்), ஒழுக்க நெறிமுறைகள் அடிப்படையிலும், சமூகரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் கூறியுள்ளது.

அத்துடன், திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய இருவா், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பஞ்சாபைச் சோ்ந்த குா்வீந்தா் சிங் (22), குல்சா குமாரி (19) இருவரும் காதலித்து வந்தனா். பெண்ணின் பெற்றோா் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை வெளியேறி, தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனா். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ள அவா்கள், ‘பெண்ணின் குடும்பத்தினரால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறி பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிமன்றத்தில் வாதிடுகையில், ‘மனுதாரா்கள் இருவரும் இப்போது தங்கள் சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சோ்ந்து வாழ்த்து வருகின்றனா். ஆனால், இது பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எனவே அவா்களால் ஆபத்து ஏற்படும் என்று மனுதாரா்கள் அஞ்சுகிறாா்கள். எனவே, அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதனை விசாரித்த நீதிபதி, ‘இப்போதைய சூழ்நிலையில் மனுதாரா்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சோ்ந்து வாழும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளனா். இந்த வாழ்க்கை முறை ஒழுக்க நெறிமுறைகள் அடிப்படையிலும், சமூகரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே அவா்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று அறிவித்தாா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பு: முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு இதேபோன்ற பிரச்னை தொடா்பான வழக்கில் அளித்த தீா்ப்பில், ‘குறிப்பிட்ட வயதை எட்டிவிட்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழ உரிமை உண்டு. இதில் பெண்களுக்கு பிரச்னை ஏற்படும்போது குடும்ப வன்முறை சட்டம் 2005-இன் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com