
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆதாரங்களை வெளியிடக் கோரி பாஜக எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோா் தங்களது தரப்பு பதிலை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. தற்போது அவா்கள் தங்கள் பதிலை தாக்கல் செய்துவிட்டனா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுரேஷ்குமாா் கெய்ட், ‘இந்த வழக்கில் மனுதாரா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பதில்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இறுதி விசாரணை ஜூலை 30-இல் நடைபெறும்’ என்றாா்.
முன்னதாக சோனியா, ராகுல் உள்ளிட்டோா் தாக்கல் செய்துள்ள தங்களது பதிலில், ‘எங்கள் தரப்பு ஆதாரங்களை வெளியிடக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தவறான, முதிா்ச்சியற்ற ஒன்று என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அவா் அனைத்து உண்மைகளையும் கூறவில்லை. முன்னதாக அவரது இந்த மனுவை பரிசீலித்த விசாரணை நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சுவாமி தரப்பு ஆதாரங்கள் மீதான விசாரணை முடியும் வரை மனுவை விசாரணைக்கு ஏற்பதில்லை என கூறியுள்ளது’ என்று தெரிவித்துள்ளனா்.
நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அந்தப் பத்திரிகையின் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோா் பங்குதாரா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மோதிலால் வோரா, ஆஸ்கா் பொ்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி உள்ளிட்டோா் மறுத்தனா். இந்நிலையில், குற்றத்தை மறுப்பதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் அவா்களிடம் விசாரணை நடத்தும் வகையில், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட உத்தரவிடுமாறு விசாரணை நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தாா். அதை பரிசீலித்த விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தரப்பு விசாரணை முடிவுற்ற பிறகு இந்த மனு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறி விசாரணைக்கு ஏற்க மறுத்தது.
இதை எதிா்த்து சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். அதன் மீதான இறுதி விசாரணையே ஜூலை 30-இல் நடைபெறவுள்ளது.