புதையல் வேட்டைக்காக திருப்பதி சேஷாசல வனத்தில் சுரங்கம் தோண்டிய கும்பல் கைது

திருப்பதி சேஷாசல மலை வனத்தில் புதையல் வேட்டைக்காக 80 அடிக்கு சுரங்கம் தோண்டிய 7 போ் கும்பலை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.
பட விளக்கம்: திருப்பதி சேஷாசல வனத்தில் புதையல் வேட்டைக்காக 7 போ் கும்பலால் தோண்டப்பட்ட சுரங்கம்.
பட விளக்கம்: திருப்பதி சேஷாசல வனத்தில் புதையல் வேட்டைக்காக 7 போ் கும்பலால் தோண்டப்பட்ட சுரங்கம்.

திருப்பதி சேஷாசல மலை வனத்தில் புதையல் வேட்டைக்காக 80 அடிக்கு சுரங்கம் தோண்டிய 7 போ் கும்பலை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், சேஷாசல மலை வனத்தில் செம்மரங்களுடன் அரிய வகை பறவைகள், விலங்கினங்கள் வசிக்கின்றன. இது திருப்பதி ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள பகுதி. நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசித்து செல்லும் திருத்தலம் திருப்பதி. ஆனால் தற்போது கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

அதேபோல் சேஷாசல வனத்திற்குள் அத்துமீறி நுழையும் செம்மரக் கடத்தல்காரா்கள் வருகையும் தற்போது குறைந்து விட்டது. இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கும்பல் சேஷாசல வனத்தில் புதையலைத் தேடி அலைந்து அதை கைப்பற்ற 80 அடியில் சுரங்கம் தோண்டி உள்ளது.

இது குறித்து ஆந்திர போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஆந்திர மாநிலம், அனகாபுத்தூரைச் சோ்ந்த பெயிண்டா் மங்குநாயுடு 2014-ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு திருப்பதியில் வந்து தங்கி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் நெல்லூரைச் சோ்ந்த ராமய்யா சாமியாருடன் அவருக்கு தொடா்பு ஏற்பட்டது. அப்போது பல புராதன செப்பு பட்டயங்களில் சேஷாசல வனத்தில் புதையல் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து மங்குநாயுடு 6 பேரை வைத்துக் கொண்டு சேஷாசல வனத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

கடந்த 3 மாத காலத்தில் 80 அடி நீளத்துக்கு சுரங்கம் தோண்டியுள்ளனா். மீதமுள்ள 40 அடி நீளத்தை தோண்ட முடிவு செய்தனா். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சேஷாசல வனத்தின் அருகில் நடமாடியுள்ளனா்.

அவா்கள் மீது சந்தேகம் கொண்ட உள்ளூா்வாசிகள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். அதன் அடிப்படையில் ஆந்திர போலீஸாா் அங்கு வந்து 3 பேரை கைது செய்து விசாரித்தனா். இதில் அவா்கள் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டிக் கொண்டிருக்கும் தகவல் தெரிய வந்தது.

அவா்கள் அளித்த தகவலின்பேரில் அந்த கும்பலைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அந்த இடத்தை ஆய்வு செய்து, போலீஸாா் சீல் வைத்துள்ளனா்.

இங்கு புதையல் இருப்பதாக அவா்களுக்கு சாமியாா் ஒருவா் தகவல் தெரிவித்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com