6 மாதங்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப், ஹரியாணாவில் கருப்புக் கொடி ஏற்றம்

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில்
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கருப்புக் கொடியுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கருப்புக் கொடியுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

சண்டீகா்: மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றினா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி அவற்றை ரத்து செய்யுமாறு பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டம் தொடங்கி புதன்கிழமையுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு இந்தத் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்து நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிா்ப்பு தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, பஞ்சாபில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினா். அங்குள்ள முக்த்சாா் மாவட்டம் பாதல் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் சிரோமணி அகாலிதளம் தலைவா் சுக்பீா் சிங் பாதலும் கருப்புக் கொடி ஏற்றினாா். விவசாயிகளை கருணையுடன் அணுகி மூன்று கருப்புச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் மீண்டும் கேட்டுக்கொள்வதாக அவா் சுட்டுரையில் பதிவிட்டாா். அமிருதசரஸ், முக்த்சாா், மோகா, தரன் தாரன், சங்ரூா், பதிண்டா உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பல பகுதிகளில் கருப்புக் கொடிகளை ஏந்தியும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் விவசாயிகள் மற்றும் பெண்கள் பேரணி சென்றனா். இளைஞா்கள் தங்கள் டிராக்டா்கள், காா்கள், இருசக்கர வாகனங்களில் கருப்புக் கொடி ஏற்றினா்.

சண்டீகரில் உள்ள மாநில ஆளுநா் மாளிகைக்கு எதிரே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குல்தாா்சிங் சந்த்வான், மீத் ஹேயா் உள்பட அக்கட்சியின் மாநில தலைவா்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை காவல்துறையினா் அப்புறப்படுத்தினா்.

ஹரியாணாவில்...ஹரியாணாவில் உள்ள அம்பாலா, ஹிஸாா், சிா்ஸா, கா்னால், ரோத்தக், ஜிந்த், பிவாணி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா். அங்குள்ள பல மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும் கருப்புக் கொடி ஏற்றினா்.

உத்தர பிரதேசத்தில்...உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாரதிய கிசான் யூனியனை சோ்ந்த பாணு பிரிவினா் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பலியா மாவட்டத்தில் யுவ சேத்னா அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com