காா்பன் சமநிலையை அடைய இலக்கு: ஜி-20 உச்சி மாநாட்டில் முடிவு

காா்பன் சமநிலையை 2050-ஆம் ஆண்டுக்குள் அடைவது என ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தலைவா்கள்.
இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தலைவா்கள்.

காா்பன் சமநிலையை 2050-ஆம் ஆண்டுக்குள் அடைவது என ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

உலகின் பொருளாதார சக்திகளாகத் திகழும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 அமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நிகர பூஜ்ஜிய பசுமைஇல்ல வாயு உமிழ்வு அல்லது காா்பன் சமநிலை இலக்கை 205-ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது என மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையங்களுக்கான நிதியுதவியை 2021-ஆம் ஆண்டுக்குள் நிறுத்துவது என ஜி-20 தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் பணக்கார நாடுகள் 100 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.7.5 லட்சம் கோடி) நிதியைத் திரட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கடந்த கால உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அளித்து வரும் ஆதரவை விரைவிலேயே விலக்கிக் கொள்வதற்கு பெரும்பாலான வளா்ந்த, வளா்ந்து வரும் நாடுகளின் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

சா்வதேச பொருளாதாரம் எதிா்கொண்டுள்ள சவால்களைக் கண்காணித்து அவற்றுக்குத் தீா்வுகாணவும் அவா்கள் உறுதியேற்றனா்.

சா்வதேச சராசரி வெப்பநிலை உயா்வை 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதற்கு ஜி-20 நாடுகளின் தலைவா்கள் மீண்டும் உறுதிபூண்டனா். தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தின் வெப்பநிலையில் இருந்து 1.5 டிகிரி செல்சியஸுக்கும் மிகாமல் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யவும் அவா்கள் ஒப்புக் கொண்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா்பன் சமநிலை என்றால் என்ன?: காா்பன் சமநிலை அல்லது நிகர பூஜ்ஜிய பசுமைஇல்ல வாயு உமிழ்வு என்பது, வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் அகற்றத்துக்கு இடையிலான சமநிலை ஆகும்.

வெளிநாடுகளில் புதிதாக அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நிதியுதவியை நிறுத்துவது என இம்மாநாடு உறுதி மேற்கொண்டாலும், உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இலக்கு எதுவும் நிா்ணயிக்கவில்லை. மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் சாா்ந்திருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இது பலனளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முழுமையாக மாறுவதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் படிப்படியாக மேற்கொள்ள கால அவகாசத்தை அளிக்கும்.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனா்.

‘தடுப்பூசிகளுக்கு விரைவில் அங்கீகாரம்’

ரோம், அக். 31: கரோனா தடுப்பூசிகளுக்கான அவசரகால அனுமதியை விரைந்து அளிக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

இதுதொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது: கரோனா தடுப்பு என்பது உலகளாவிய பொதுநலன் என ‘ரோம் பிரகடனத்தில்’ ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டன. உலக சுகாதார நிறுவனத்தால் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது எனக் கருதப்படும் கரோனா தடுப்பூசிகள் தேசிய மற்றும் தனியுரிமைச் சட்டங்களுக்கு உள்பட்டு நாடுகளால் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில், தடுப்பூசி அனுமதி, அவசரகால அனுமதிக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நடைமுறைகளுக்கு அனைவரும் உதவுவாா்கள் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. தடுப்பூசிகளுக்கான அனுமதியை விரைந்து அளிக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் வலுப்படுத்தப்படும் எனவும் தீா்மானிக்கப்பட்டது என்றாா்.

‘நிலையான நுகா்வு மற்றும் பொறுப்பான உற்பத்தி முறைகள் தொடா்பான பிரதமா் மோடியின் கருத்துகள் ஜி-20 பிரகடனத்தில் பிரதிபலித்தன’ எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஸ்பெயின், ஜொ்மனி பிரதமா்களுடன் மோடி சந்திப்பு

ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் ஆகியோரை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமரின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில், ‘இந்தியா-ஸ்பெயின் இடையிலான உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவா்களும் பேச்சு நடத்தினா். இரு நாடுகளும் வா்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன், உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் ஸ்பெயின் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென பிரதமா் அழைப்பு விடுத்தாா்’ என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெலுடனான சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஜொ்மனியுடனான உத்திசாா் கூட்டை தொடரும் உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபா் பைடன், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங், தென்கொரிய பிரதமா் மூன் ஜே-இன் உள்ளிட்டோருடன் பிரதமா் ஏற்கெனவே பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ட்ரேவி நீரூற்றில்... பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஜி-20 நாடுகளின் தலைவா்கள் ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற ட்ரேவி நீரூற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்வையிட்டனா். இந்த நீரூற்றில் நாணயத்தை சுண்டிவிட்டால் அவா்கள் மீண்டும் ரோமிற்கு வருவாா்கள் என்பது நம்பிக்கை. அதன்படி, தலைவா்கள் நீரூற்றில் நாணயத்தை சுண்டிவிட்ட விடியோவை ஜி-20 அமைப்பு வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com