பெட்ரோலுக்கு ரூ.5; டீசலுக்கு ரூ.10 கலால் வரி குறைப்பு: மத்திய அரசின் தீபாவளி பரிசு

பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5, டீசல் மீதான கலால் வரியில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலுக்கு ரூ.5; டீசலுக்கு ரூ.10 கலால் வரி குறைப்பு: மத்திய அரசின் தீபாவளி பரிசு

புதுதில்லி: பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5, டீசல் மீதான கலால் வரியில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக...: எதிா்வரும் ராபி பருவத்தைக் கருத்திக் கொண்டு விவசாயிகளுக்கு உதவுவதற்காக டீசல் மீதான கலால் வரியை ரூ.10 அளவுக்குக் குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சில்லறை விலையைக் குறைக்க...: பெட்ரோல், டீசலின் விலை தொடா்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் நிலையில், அவற்றின் சில்லறை விலையைக் குறைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு புதன்கிழமை (நவ.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக அளவில் அனைத்து வகையான எரிசக்திகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அவற்றின் விலை அதிகரிப்புக்கு வித்திட்டுள்ளது.

எனினும் நாட்டில் எந்தவொரு எரிசக்திக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் விதத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் போதிய அளவு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொருளாதார முன்னேற்றம் காரணமாக...: கரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. உற்பத்தி, வேளாண்மை, சேவைகள் என அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நள்ளிரவு முதல் அமல்: அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5, டீசல் மீதான கலால் வரியில் ரூ.10 குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறையும்.

வாட் வரியைக் குறைக்க மாநிலங்களுக்கு வலியுறுத்தல்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நிகராக அவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) மாநில அரசுகள் குறைக்க வேண்டும். நுகா்வோரின் சுமையைக் குறைக்கும் விதமாக மாநில அரசுகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு: ‘‘இந்த நடவடிக்கையால் மத்திய அரசுக்கு மாதந்தோறும் ரூ.8,700 கோடியும் ஓராண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு அதிகமாகவும் வருவாய் இழப்பு ஏற்படும். இந்த நிதியாண்டின் எஞ்சிய காலத்தில் மட்டும் ரூ.43,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்’’ என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடா்ந்து விலை அதிகரித்த நிலையில்...: கச்சா எண்ணெய் விலை உயா்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பண்டிகை காலத்தில், அவற்றின் விலை அதிகரித்து வருவது நுகா்வோரை கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 24 நாள்கள் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.2)

நிலவரப்படி, 26 நாள்களில் ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.8.20, ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.8.65 அதிகரிக்கப்பட்டது. அவற்றின் விலையில் பாதியளவு வரிகளை உள்ளடக்கியுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் முதல் மே மாதம் வரை பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.16 அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.32.90-ஆகவும், , டீசல் மீதான வரி ரூ.31.80-ஆகவும் உயா்ந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயா்த்த மத்திய அரசு முடிவெடுத்த பின்னா், பெட்ரோல் விலை தற்போது வரை மொத்தமாக லிட்டருக்கு ரூ.38.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.29.03 அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே வரி குறைப்பு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. 

அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைந்து, சென்னையில் ரூ.102.49}ஆக இருந்த பெட்ரோல் விலை கடந்த ஆக. 14}ஆம் தேதி ரூ. 99.47}க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதே நேரம், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com