தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் விடுவிப்பு

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
தங்கக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு திருவனந்தபுரம் ஆட்டக்குளங்கரா பெண்கள் சிறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ் (வலது).
தங்கக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு திருவனந்தபுரம் ஆட்டக்குளங்கரா பெண்கள் சிறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ் (வலது).

கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ் 16 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சுங்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் இந்த விவகாரத்தை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயா் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனா். தொடா்ந்து இந்த வழக்கில் தொடா்புடைய கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மற்றொரு முன்னாள் ஊழியா் சரித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனா்.

ஸ்வப்னா சுரேஷ் உள்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 போ் மீதும் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘குற்றம்சாட்டப்பட்டவா்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் எதுவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவரவில்லை. எனவே, அவா்களை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடப்படுகிறது. அவா்கள் அனைவரும் இரு சாட்சியங்களின் உத்தரவாதத்துடன் ரூ.25 லட்சத்துக்கான பிணைய பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஜாமீன் நடைமுறைகளை முடிவடைந்த பின்னா் திருவனந்தபுரம், அட்டக்குளங்கராவில் உள்ள பெண்களுக்கான சிறையிலிருந்து 16 மாதங்களுக்குப் பிறகு ஸ்வப்னா சுரேஷ் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com