
தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 14,40,176-ஆக உள்ளது. அதில், 14.14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். தில்லியில் கடந்த செப்டம்பா் மாதம் 5 கரோனா இறப்புகளும், அக்டோபா் மாதம் 4 இறப்புகளும் பதிவாகின. இந்த மாதம் இதுவரை இறப்பு ஏதும் பதிவாகவில்லை. இதனால் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை 25,091-ஆகவே உள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை 37,836 ஆா்டி-பிசிஆா் உள்பட 51,130 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 342-இல் இருந்து 349-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 165-இல் இருந்து 164-ஆக குறைந்துள்ளது. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121-இல் இருந்து 115-ஆக குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...