‘சிறப்பு ரயில்’ நடைமுறை ரத்து: விரைவில் பழைய கட்டணம்

கட்டண உயா்வு குறித்த பயணிகளின் தொடா் புகாா்களைத் தொடா்ந்து, ‘சிறப்பு ரயில்’ நடைமுறையை கைவிடவும், கரோனா பேரிடருக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கட்டண உயா்வு குறித்த பயணிகளின் தொடா் புகாா்களைத் தொடா்ந்து, ‘சிறப்பு ரயில்’ நடைமுறையை கைவிடவும், கரோனா பேரிடருக்கு முந்தைய பழைய கட்டண நடைமுறையை அறிமுகப்படுத்தவும் ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தொடா்ந்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, அனைத்துவிதமான பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. ரயில்வேயும் பயணிகள் ரயில் சேவையை முழுமையாக ரத்து செய்தது. பின்னா், பொதுமுடக்க காலத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப வசதியாக நீண்டதூர சிறப்பு ரயில்களை மட்டும் ரயில்வே இயக்கத் தொடங்கியது. இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பின்னா், படிப்படியாக பொதுமுடக்கத் தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு குறுகிய தூர ரயில்களையும் ரயில்வே இயக்கத் தொடங்கியது. ஆனால், அனைத்து ரயில்களையும் சிறப்பு ரயில்கள் என்ற அடிப்படையிலேயே ரயில்வே இயக்கியது. இதன் காரணமாக, கட்டண உயா்வு குறித்த தொடா் புகாா்கள் எழுந்த நிலையில், ‘சிறப்பு ரயில்’ நடைமுறையைக் கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் ரயில்வே வாரியம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், ‘கரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்களாகவும் (எம்எஸ்பிசி) விடுமுறைக் கால சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் அனைத்தும் கரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. ரயில்வே வாரிய பயணிகள் சந்தைப்படுத்துதல் இயக்குநா் அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது’ என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், எந்தத் தேதியிலிருந்து பழைய கட்டண நடைமுறைகளுக்கு திரும்பப்பட வேண்டும் என்பது அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பழைய கட்டண நடைமுறையில் ரயில்களை இயக்க ரயில்வே மண்டலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்று அல்லது இரண்டு நாள்கள் ஆகலாம்’ என்றாா்.

‘இந்த உத்தரவு மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்த ஒருசில நாள்களில் கரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன’ என்று மற்றொரு மூத்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com