
கோப்புப்படம்
மணிப்பூரில் பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மியான்மர் எல்லைப் பகுதி அருகே உள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அசாம் ரைபிள்ஸ் பிரிவு ராணுவ வீரர்கள் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி மற்றும் மகன் உயிரிந்திருப்பதை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், "இன்று சூரசந்த்பூரில் அசாம் ரைபிள்ஸ் பிரிவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அதில், கர்னல் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட சில ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் அரசுப் படைகளும் துணை ராணுவமும் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என பதிவிட்டுள்ளார்.
Strongly condemn the cowardly attack on a convoy of 46 AR which has reportedly killed few personnel including the CO & his family at CCpur today. The State forces & Para military are already on their job to track down the militants. The perpetrators will be brought to justice.
— N.Biren Singh (@NBirenSingh) November 13, 2021
மற்ற வடகிழக்கு மாநிலங்களைப் போலவே மணிப்பூரும் பல ஆயுதக் குழுக்களின் தாயகமாக உள்ளது. அதிக சுயாட்சி கோரியும் பிரிவினையை வலியுறுத்தியும் அவர்கள் போராடிவருகிறார்கள்.
இதையும் படிக்க | தொடரும் பெயர் மாற்றும் படலம்: அசாம் தேசிய பூங்காவின் பெயர் மாற்றம்?
பல ஆண்டுகளாகவே, சீனா, மியான்மர், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதியில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.