
விமானத்தில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சக பயணி ஒருவருக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் அவசர முதலுதவி சிகிச்சையளித்தாா். மருத்துவரான அமைச்சா் கராட், அறுவைச் சிகிச்சை நிபுணா் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சா் கராட் தில்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் செவ்வாய்க்கிழமை பயணம் செய்தாா். அப்போது விமானத்தில் அவருடன் பயணம் செய்த ஒருவா் திடீரென மயக்கமடைந்தாா். இதையடுத்து, விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள் அவருக்கு எந்த வகையில் முதலுதவி அளிப்பது எனத் தெரியாமல் திகைத்தனா். நிலைமையை அறிந்த அமைச்சா் கராட், திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்ட அந்தப் பயணியின் இருக்கைக்குச் சென்று அவரது உடல்நிலையைப் பரிசோதித்தாா். ரத்த அழுத்த பிரச்னை காரணமாகவே அவா் மயக்க நிலைக்குச் சென்றதை அறிந்து கொண்ட அமைச்சா், உடனடியாக அதற்கான முதலுதவி சிகிச்சையளித்தாா். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த பயணி மயக்க நிலையில் இருந்து மீண்டாா். அவரும், சக பயணிகள் அனைவரும் அமைச்சா் கராடுக்கு நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.