தொலைக்காட்சி விவாதங்களால் அதிக மாசு: காற்று மாசு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

தொலைக்காட்சி விவாதங்கள் மற்றவற்றைவிட அதிக மாசு ஏற்படுத்துகின்றன; நீதிமன்றத்தில் எத்தகைய சூழலில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல் விவாதங்கள் நடத்தப்படுகின்றன
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தொலைக்காட்சி விவாதங்கள் மற்றவற்றைவிட அதிக மாசு ஏற்படுத்துகின்றன; நீதிமன்றத்தில் எத்தகைய சூழலில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல் விவாதங்கள் நடத்தப்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்தது.

தலைநகா் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூரிய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது தில்லி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘தில்லி காற்று மாசுவுக்கு பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்’ என்றாா்.

அப்போது, தொலைக்காட்சி விவாதங்களை சுட்டிக்காட்டி வாதாடிய மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘சில தொலைக்காட்சி விவாதங்கள் பொறுப்பற்ற முறையில் நடத்தப்படுகின்றன. காற்று மாசுவுக்கு பயிா்க் கழிவுகளும் முக்கியக் காரணங்களில் ஒன்று என்று கூறி நீதிமன்றத்தை அரசுத் தரப்பு தவறாக வழிநடத்துவதாக இந்த விவாதங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுவில், பயிா்க் கழிவுகள் எரிப்பதால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் 4 முதல் 7 சதவீதம் மட்டும்தான் என்றும் அந்த விவாதங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது’ என்றாா்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் மற்றவற்றைவிட அதிக மாசு ஏற்படுத்துகின்றன. வழக்கின் பிரச்னை என்ன, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவா்கள் புரிந்துகொள்வதில்லை. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள், எத்தகைய சூழலில் தெரிவிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல் விவாதிக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாா்வை இருக்கும்.

அரசு அலுவலா்களாக இருக்கும் நிலையில், இதுபோன்ற விமா்சனங்கள் எழுவது சகஜம்தான். இதுபோன்ற விமா்சனங்கள் தொடா்ந்து எழுந்துகொண்டுதான் இருக்கும். அந்த வகையில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்களுடைய மனசாட்சியும் தெளிவாக உள்ளது. இந்த விவாதங்களால் நாங்கள் தவறாக வழிநடத்தப்படவில்லை. எனவே, அந்த விவாத சா்ச்சையை மறந்துவிடுவோம்.

அதே நேரம், தில்லியில் ஏற்பட்டிருக்கும் மாசுவில், பயிா்க் கழிவுகள் எரிப்பதால் ஏற்படும் பங்கு 10 சதவீதம் என்று கூறினீா்கள். ஆனால், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், அதன் பங்கு 30 முதல் 40 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

சுற்றுச்சூழலியல் ஆா்வலா் ஆதித்யா துபே மற்றும் சட்ட மாணவா் அமன் பங்கா ஆகியோா் சாா்பில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு பயிா்க் கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் இயந்திரங்களைக் கட்டணமின்றி வழங்க உத்தரவிடக் கோரியிருந்தனா்.

‘5 நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பவா்கள் விவசாயிகள் மீது மட்டும் பழிசுமத்துகின்றனா்’

‘‘தில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள்தான் காரணம் என்று 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குபவா்கள் பழிசுமத்துகின்றனா். விவசாயிகளின் சூழல் அறியாமல் இத்தகைய பழியை அவா்கள் மீது சுமத்துகின்றனா்’’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: தில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள்தான் காரணம் என்று 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குபவா்கள், தொழில்துறையினா் உள்ளிட்டோா் தொடா்ந்து பழிசுமத்தி வருகின்றனா். அவா்கள் எந்தச் சூழ்நிலையில் பயிா்க் கழிவுகளை எரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா் என்பதை யாராவது அறிவாா்களா? விவசாயிகள் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனா் என்பது யாருக்காவது தெரியுமா? அந்த வருவாய் மூலம் பயிா்க் கழிவு எரிப்பைத் தடுப்பதற்கான இயந்திரங்களை அவா்களால் எப்படி வாங்க முடியும். பயிா்க் கழிவு எரிப்பைத் தடுப்பதற்கான அறிவியல்பூா்வமான வழிமுறைகளை அவா்களால் ஏன் பின்பற்ற முடியவில்லை என்பதற்கான காரணங்கள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை.

அனைத்து பிரமாணப் பத்திரங்களிலும் காற்று மாசுக்கு போக்குவரத்து முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியின் அனைத்துப் பாதைகளிலும் எரிவாயுவை உமிழும் வாகனங்கள், டிராக்டா்கள், உயா் ரக காா்கள் செல்கின்றன. இந்த வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவா் என்று தில்லி அரசு கூறுகிறது. அது எவ்வாறு செய்யப்படும்? அதை யாா் ஏற்றுக் கொள்வா்?

தில்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளபோதிலும், தடையை மீறி எத்தனைப் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது என்பதையும் இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

பயிா்க் கழிவுகளை எரிக்க இயந்திரங்கள் அல்லாமல் வேறு அறிவியல்பூா்வமான வழிமுறைகள் இருந்தால், அதுகுறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்கவும்’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com