ஆக்கபூா்வ விவாதம் என்று பேசும் பிரதமா் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்பாரா? ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூா்வமான விவாதம் நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்று மேடையில் பேசும் பிரதமா், நாடாளுமன்ற விவாதத்தில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூா்வமான விவாதம் நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்று மேடையில் பேசும் பிரதமா், நாடாளுமன்ற விவாதத்தில் முதலில் பங்கேற்பாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

சிம்லாவில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமா் மோடி, நாடாளுமன்ற கூட்டத் தொடா்களின்போது உறுப்பினா்களால் பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. நமது சட்டப்பேரவைகளின் பாரம்பரியங்களும், நடைமுறைகளும் இந்தியா் என்ற இயல்புடன் இருக்க வேண்டும். ஆக்கபூா்வமான, ஆரோக்கியமான விவாதங்களுக்கென சட்டப்பேரவைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கு வெறும் நடைமுறை மட்டுமல்ல. அது இந்தியாவின் இயல்பு’ என்று பேசினாா்.

இந்நிலையில், பிரதமரின் இந்த பேச்சை விமா்சித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் ஆக்கபூா்வமான விவாதம் வேண்டும் என்று பிரதமரின் பேச்சு பத்திரிகையில் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. மேலும், ஆக்கப்பூா்வ விவாதங்களுக்காக தனி நேரம் வேண்டும் என்று பிரதமா் கூறியுள்ளாா். ஆனால், இதில் முக்கிய கேள்வி என்னவென்றால் இதுபோன்ற விவாதங்களில் பிரதமா் பங்கேற்பாரா என்பதுதான்’ என்று கூறியுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான சட்டங்கள் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றப்படுகிறது. மேலும், நாடாளுமன்றம் நடைபெறாத நேரத்தில் அவசர சட்டம் மூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவராமலேயே அரசு தனக்கு சாதகமான பல்வேறு விஷயங்களை அமல்படுத்தி வருகிறது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மையில் கூட சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக் காலத்தைத் தற்போது உள்ள 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com