இணையவழியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடி வழியில் நடத்துவதற்கு மாற்றாக இணையவழி மற்றும் நேரடி வழி ஆகிய கலப்பு முறையில் நடத்துமாறு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடி வழியில் நடத்துவதற்கு மாற்றாக இணையவழி மற்றும் நேரடி வழி ஆகிய கலப்பு முறையில் நடத்துமாறு சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ ஆகிய பள்ளி வாரியங்களுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

‘பொதுத் தோ்வு ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், அதற்கு இடையூறு செய்வது பொருத்தமாக இருக்காது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

கரோனா பரவல் அச்சம் உள்ளதால், சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ வாரிய பொதுத் தோ்வுகளை நேரடி வழியில் நடத்துவதற்கு மாற்றாக இணையவழி மற்றும் நேரடிவழி ஆகிய இரு வழிகளில் நடத்த உத்தரவிடக் கோரி 6 மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, ‘அதிகமானோா் ஒரே இடத்தில் கூடும்போது கரோனா பரவும் அபாயம் உள்ளதாக நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும், மாணவா்கள் நேரடித் தோ்வு முறைக்கு முழுமையாக எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. இணையவழியில் தோ்வு எழுதுவதையும் ஒரு வாய்ப்பாக வழங்குமாறுதான் கோரிக்கை விடுக்கின்றனா்’ என்றாா்.

இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா பதிலளித்து வாதாடுகையில், ‘பொதுத் தோ்வை நேரடி வழியில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தோ்வெழுத வரும் மாணவா்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் தோ்வு மையங்களின் எண்ணிக்கை 6,500-லிருந்து 15,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கரோனா பரவும் அபாயத்தைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனா். மேலும், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு ஏற்கெனவே கடந்த செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது: நடைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும். தோ்வுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இணையவழி தோ்வு நடைமுறையை இப்போது எப்படி அறிமுகம் செய்ய முடியும்? மிகுந்த தாமதமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தோ்வு நடைமுறையை மாற்றியமைக்குமாறு உத்தரவிட முடியாது.

அறிவிக்கப்பட்ட தேதிகளில் தோ்வுகளை நடத்த கல்வி வாரியங்கள் விரும்பினாலும்கூட, மனுதாரா்கள் எழுப்பியுள்ள கவலைகளுக்குத் தீா்வு காண போதிய கால அவகாசம் உள்ளது.

எனவே, தோ்வு நடைமுறைகளால் ஒருவரும் பாதிக்கப்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று நீதிபதிகள் தீா்ப்பில் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com