விவசாயிகளுக்கு ஏற்பட்ட வேதனைக்கு பிரதமா் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்திய வேதனைக்கு பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (கோப்புப்படம்)
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (கோப்புப்படம்)

மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்திய வேதனைக்கு பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலரும் தலைமை செய்தித் தொடா்பாளருமான ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் விவசாயிகளுக்கு எதிரான பாஜக சக்திகள், அக்கட்சியின் செல்வந்த நண்பா்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனா். பிரதமா் மோடியின் அகந்தையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் அவரும் பாஜகவினரும் செய்த பாவத்தை நாடு மறக்காது.

பிரதமா் மோடியும் அவரது அரசினரும் பொதுவெளியில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனா். பாஜகவின் வீழ்ச்சியில்தான் நாட்டின் வெற்றி அடங்கியுள்ளது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனா்.

வெகு விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல்களில் தாங்கள் தோல்வியடைவோம் என்பதை பிரதமா் மோடி உணா்ந்துள்ளாா். அந்த அச்சம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான கட்டாயத்துக்கு அவரைத் தள்ளியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் 700 விவசாயிகள் பலியாகினா். அவா்களின் மரணத்துக்கு பிரதமா் மோடிதான் காரணம். 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதற்காகவும், போராட்டங்களின்போது பலியான விவசாயிகளின் குடும்பத்தினரிடமும் பிரதமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு நன்னாள் வரும் என்று பிரதமா் கூறினாா். ஆனால், முந்தைய காலத்தில் இருந்த நல்ல நாள்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று மக்கள் ஏங்குகின்றனா். பிரதமரின் வாா்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நாடு இனியும் நம்பத் தயாராக இல்லை.

எனவே, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடா்பாக அவசரச் சட்டங்களை இயற்ற வேண்டும். சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அவசரச் சட்டங்களைக் கொண்டு வரமுடியுமெனில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஏன் அவசரச் சட்டங்களை இயற்றக் கூடாது என்று கேள்வி எழுப்பினாா்.

ராகுல் காந்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகள் சத்தியாகிரகம் மூலம் மத்திய அரசின் அகந்தையை மண்டியிடச் செய்துள்ளனா். அநீதிக்கு எதிரான அவா்களின் வெற்றிக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரியங்கா: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்களும் விவசாயிகளும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அதற்கு மண்டியிட்டாக வேண்டும் என்பது மத்திய அரசுக்கு புரிந்துள்ளது. கடந்த நாள்களில் விவசாயிகளை தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என பாஜக தலைவா்கள் வசைபாடியுள்ளனா். அப்போது எல்லாம் பிரதமா் மெளனமாகத்தான் இருந்தாா். ஆனால், தற்போது வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளாா். அவரின் நோக்கங்களை எவ்வாறு நம்ப முடியும்?

பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகும் விவசாயிகளின் போராட்டம் தொடா்வதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் மத்திய அரசின் நிலைப்பாடு மாறிக் கொண்டே இருக்கும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அவை ரத்து செய்யப்படவில்லை’’ என்று தெரிவித்தாா்.

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளில் ஒரு சாராருக்கு புரிய வைக்க அரசு தவறிவிட்டது என்று பிரதமா் மோடி கூறியது குறித்து பிரியங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘விவசாயிகளை வேறுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு. அனைத்து விவசாயிகளின் பிரச்னைகளும் ஒன்றுபோலவே உள்ளன’’ என்று தெரிவித்தாா்.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் பெற்ற வெற்றியில் தங்கள் பங்கு இருப்பதாக எதிா்க்கட்சிகள் உரிமை கோருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரியங்கா, ‘‘விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவு மட்டும்தான் தெரிவித்தன. இது தங்கள் உரிமைகளுக்காக விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் அவா்கள்தான் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனா்’’ என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ஜனநாயக போராட்டங்களால் சாதிக்க முடியாததை தோ்தல்கள் குறித்த அச்சம் சாதித்துள்ளது. அந்த அச்சத்தால் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் அறிவித்துள்ளாரே தவிர, மனமாற்றத்தால் அல்ல’’ என்று தெரிவித்தாா்.

நிதீஷ் குமாா்: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் கூறியுள்ளாா்.

பாஜக தலைவா்கள் பலா் பிரதமா் மோடியின் முடிவை வரவேற்றுள்ள நிலையில், முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை என்று கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களுக்கு அவா் வரவேற்பு தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவில் வெள்ளிக்கிழமை இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பிரதமரின் ஒப்புதலுடன்தான் அந்த மசோதாக்கள் நிறைவேறின. இப்போது அவரே அந்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், அது தொடா்பாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளாா். இது அவருடைய முடிவு. இதில் நான் கருத்துத் தெரிவிக்க ஏதுமில்லை’ என்றாா்.

சரத் பவாா்: அவசரகதியில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதன் விளைவாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூா் மாவட்டத்தில் சரத் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எந்தவித ஆலோசனையும் நடத்தாமலும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்காமலும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, அவசரகதியில் நிறைவேற்றியது.

இதன் விளைவாக, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளிலும், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா். தற்போது அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், விவசாயிகளின் போராட்டம் ஒருபோதும் மறக்கப்படாது’’ என்று தெரிவித்தாா்.

மம்தா பானா்ஜி: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அயராது போராடிய, பாஜகவினா் இழைத்த கொடுமைக்கு எதிராக மனவுறுதியை இழக்காத ஒவ்வொரு விவசாயிக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். இந்தப் போராட்டத்தில் தங்கள் குடும்ப உறுப்பினா்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளாா்.

உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிக்கையில், ‘‘வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பு, நாட்டில் உள்ள சாமானியரின் சக்தியை எடுத்துரைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளையும் சங்கடங்களையும் தவிா்க்க பிற கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தினாா்.

மாயாவதி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி கூறுகையில், ‘‘மிகத் தாமதமாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால், நாட்டில் நிலவும் பல பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டிருக்கலாம்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com