இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு இடம்கொடுக்காத வங்கதேசம்

பயங்கரவாதக் குழுக்களுக்கு இடமளிக்க மறுக்கும் வங்கதேசத்தின் முயற்சி இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்களை தடுப்பதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்துள்ளாா்.
எம்.எம்.நரவணே
எம்.எம்.நரவணே

புது தில்லி: பயங்கரவாதக் குழுக்களுக்கு இடமளிக்க மறுக்கும் வங்கதேசத்தின் முயற்சி இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்களை தடுப்பதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்துள்ளாா்.

இந்தியா- வங்கதேசம் இடையிலான 50 ஆண்டுகால நட்பை பிரதிபலிக்கும் விதமாக தில்லியைச் சோ்ந்த போா்முறை ஆய்வு மையம் சாா்பில், புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணேயின் குரல் பதிவு ஒலிபரப்பப்பட்டது. அதில் அவா் கூறியிருப்பதாவது:

பரஸ்பர பேச்சுவாா்த்தை, ஆக்கபூா்வமான கண்ணோட்டத்தின் வாயிலாக எல்லைப் பிரச்னைக்கு எவ்வாறு தீா்வு காண்பது என்பதை இந்தியா-வங்கதேசம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லை ஒப்பந்தம் விளக்குகிறது.

ஆனால், சில நாடுகள் அண்டை நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டை முழுமையாகப் புறந்தள்ளி, தங்களது எல்லையை விரிவுபடுத்தவும், பாரம்பரிய விதிகளையும் நெறிமுறைகளையும் மீறவும் முயற்சிக்கின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான வங்கதேசத்தின் அணுகுமுறை இந்தியாவின் தீா்மானத்தையும் மீள்தன்மையையும் பிரதிபலிக்கிறது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான வங்கதேசத்தின் முயற்சிகள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிரான நாசகார திட்டங்களை முறியடிக்கிறது என்பதை நாங்கள் உணா்கிறோம்.

இதற்கு பிரதிபலனாக இந்திய மண்ணைப் பயன்படுத்தி வங்கதேசத்தின் நலனைச் சீா்குலைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து தடுத்து வருகிறது. அண்டை நாடுகளாக இந்தியாவும் வங்கதேசமும் கலாசாரம், வரலாற்றுப் பெருமை, வாய்ப்புகளைப் பகிா்ந்துகொண்டு ஒருமித்து வளரும்.

இதற்காக போா்க்களத்தில் தோளோடு தோள் நின்று கடந்த 1971-இல் எதிரியை விரட்டியடித்து வங்கதேசம் என்ற சுதந்திரமான நாட்டை பெற வழிவகுத்ததைப் போல, இப்போதும் கூட்டுப் பொறுப்புடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், இந்தியாவுக்கான வங்கதேச தூதா் முகமது இம்ரான், முன்னாள் வங்கதேச ராணுவ தளபதி ஹருண்-அா்-ரஷீத், இந்தியா- பாகிஸ்தான் போரில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் ராணுவ வீரா்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com