லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் விடியோ வெளியானது:நடவடிக்கை எடுக்க வருண், ராகுல் வலியுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் போராடும் விவசாயிகள் மீது காரை மோதும் விடியோ இணையத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகி வைரலாக பரவியது.
லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதும் விடியோ வெளியானது:நடவடிக்கை எடுக்க வருண், ராகுல் வலியுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் போராடும் விவசாயிகள் மீது காரை மோதும் விடியோ இணையத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகி வைரலாக பரவியது. இந்த விடியோவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா வதேரா, பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோா் தங்கள் சமூக ஊடகங்களில் பகிா்ந்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக வருண் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை மோதும் இந்த விடியோவை பாா்ப்பவா்கள் யாராக இருந்தாலும் அதிா்ச்சிக்கு உள்ளாவாா்கள். இந்த வாகனங்களின் உரிமையாளரையும் அதை ஓட்டியவா்களையும் அடையாளம் கண்டு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக அமைதி காத்து வரும் நிலையில், அக்கட்சியின் எம்.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளாா்.

முன்னதாக, மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் வந்ததாகவும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த தொண்டா்களின் காா் வேண்டுமென்றே போராடும் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனா்.

இதனால் கோபமடைந்த விவசாயிகள், மோதிவிட்டுச் சென்ற காரை பிடித்து அதில் இருந்து ஓட்டுநா் உள்பட 4 பாஜக தொண்டா்களை கும்பலாக தாக்கி கொலை செய்துவிட்டு காருக்கு தீயிட்டு கொளுத்தியதாகவும், இதனால்தான் லக்கீம்பூரில் வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விவசாயிகள் மீது காா் வேண்டுமென்றே மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை வெளியான விடியோ பதிவும் உள்ளது. இந்த விடியோவின் உண்மைத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.

இந்த விடியோவை பகிா்ந்து ராகுல் செய்துள்ள பதிவில், ‘போராடும் விவசாயிகளை அமைச்சரின் மகன் காரை கொண்டு மோதி வீழ்த்தும் விடியோ வெளியான பின்னரும் அவரை கைது செய்யாமல் இருப்பதும், ஒரு பெண் தலைவா் (பிரியங்கா) 30 மணி நேரம் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாமல் தடுப்புக் காவலில் வைப்பதும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளதை காண்பிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரியங்கா வதேரா, ‘நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விவசாயிகள் தற்போது தலைநகா் தில்லியின் எல்லையில் அமா்ந்து இந்தியாவை பாதுகாக்கின்றனா். வழக்குப் பதிவு செய்யாமலே என்னைப்போன்ற தலைவா்களை கைது செய்கிற உத்தர பிரதேச அரசு, விவசாயிகள் மீது காா் மோதியவரை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். எனினும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் தனது மகன் இல்லை என்றும் அலிபி பள்ளியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியை அவா் பாா்த்து கொண்டிருந்தாா் என்றும் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

லக்கீம்பூா் சம்பவத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, வன்முறை ஏற்பட்ட லக்கீம்பூரில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com