லக்னௌ சென்ற மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?- ராகுல் காந்தி சரமாரி கேள்வி

லக்கிம்பூரில் விவசாயிகளை கொன்ற மத்திய அமைச்சரின் மகன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 
லக்னௌ சென்ற மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?- ராகுல் காந்தி சரமாரி கேள்வி

புதுதில்லி: உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகளை கொன்ற மத்திய அமைச்சரின் மகன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் வந்ததாகவும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த தொண்டா்களின் காா் வேண்டுமென்றே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரி மாவட்டத்தில் போராடும் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனா்.

இதனால் கோபமடைந்த விவசாயிகள், மோதிவிட்டுச் சென்ற காரை பிடித்து அதில் இருந்து ஓட்டுநா் உள்பட 4 பாஜக தொண்டா்களை கும்பலாக தாக்கி கொலை செய்துவிட்டு காருக்கு தீயிட்டு கொளுத்தியதாகவும், இதனால்தான் லக்கீம்பூரில் வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விவசாயிகள் மீது காா் வேண்டுமென்றே மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை வெளியான விடியோ பதிவும் உள்ளது. இந்த விடியோவின் உண்மைத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். எனினும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் தனது மகன் இல்லை என்றும் அலிபி பள்ளியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியை அவா் பாா்த்து கொண்டிருந்தாா் என்றும் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

லக்கீம்பூா் சம்பவத்தில் பலியானவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை குறித்து தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, அன்றைய தினம், லக்னௌ சென்ற பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?, இது விவசாயிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல். வன்முறைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் இதுவரை கைது செய்யப்படதாது ஏன்?, அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்று ராகுல்காந்தி  சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துவதாக குற்றம்சாட்டிய ராகுல், எதிர்க்கட்சிகளின் பணியே அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான். 

இந்தப் பிரச்னையை எழுப்புவது ஊடகங்களின் பொறுப்பு, ஆனால் நாங்கள் கேள்விகள் கேட்கும்போது, ​​பிரச்னையை எழுப்பும் ஊடகங்கள் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சொல்கிறீர்கள்.  எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி சத்தீஸ்கர், பஞ்சாப் முதல்வர்களுடன் லக்கிம்பூர் கெரி சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க செல்ல திட்டமிட்டுள்ளோம். கெரிக்கு சென்று அங்குள்ள நிலைமையை தெரிந்துகொண்டு விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று ராகுல் கூறியுள்ளார். 

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் லக்கிம்பூர் கெரி செல்வதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் ராகுல் லக்னௌவுக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் வருகையை தடுக்குமாறு லக்கிம்பூர் மற்றும் சீத்தாப்பூர் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, லக்கிம்பூர் கெரி மற்றும் சீதாபூருக்குச் செல்ல வேண்டாம் என்று விமான நிலையத்திலேயே ராகுலிடம் அறிவுறுத்துவோம் என லக்னௌ காவல் ஆணையர் டி.கே.தருண் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com