உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார் அகிலேஷ் யாதவ்!

உத்தரப்பிரதேச வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்கிம்பூர் செல்கிறார். 
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்கிம்பூர் செல்கிறார். 

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் கடந்த அக். 3 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் விவசாயிகளின் மீது மோதியதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. 

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வந்த நிலையில், பல்வேறு தடைகளுக்குப் பிறகு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று லக்கிம்பூரில் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் இன்று விசாரணை நடைபெறுகிறது. 

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரப்பிரதேச அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று லக்கிம்பூர் செல்கிறார். முன்னதாக, நேற்று முன்தினம் அவர் லக்கிம்பூர் செல்ல புறப்பட்டபோது காவல்துறையினர் தடுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் லக்னெளவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 'மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் யோகி அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ் நீதி வழங்கப்படாது. எனவே, நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவே மக்களை அச்சுறுத்தும்போது எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com