
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவாஸ்தவா லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை 2 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அஸ்வதி இதுதொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆளுநரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஒருநபர் ஆணையத்தை அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் விவசாயிகளின் மீது மோதியதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வந்தது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று லக்கிம்பூரில் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.