உ.பி. வன்முறை: மத்திய அமைச்சரை நீக்க வேண்டும்; குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முறையீடு

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி வன்முறை தொடா்பாக பாகுபாடற்ற விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
தில்லியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல், பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோனி, மல்லிகாா்ஜுன காா்கே.
தில்லியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல், பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோனி, மல்லிகாா்ஜுன காா்கே.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி வன்முறை தொடா்பாக பாகுபாடற்ற விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள திகோனியா பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போரட்டத்தின்போது அவா்கள் மீது பாஜகவினா் காா் மோதியது. இதில் விவசாயிகள் நால்வா், பாஜக தொண்டா்கள் இருவா், பத்திரிகையாளா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

விவசாயிகளுக்கு ஆதரவாக...: இந்த நிலையில், விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவருடைய அறிவுறுத்தலின் பேரிலேயே விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை மோதச் செய்ததாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். மேலும், ஆசிஷ் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஆசிஷ் மிஸ்ராவை உத்தர பிரதேச போலீஸாா் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கையிலும் ஆசிஷ் மிஸ்ராவின் பெயா் இடம்பெற்றுள்ளது. இந்தச் சூழலில், ‘விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், மத்திய இணையமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என காங்கிரஸ் கட்சியினா் வலியுறுத்தினா்.

குடியரசுத் தலைவரிடம் தீா்மானம் சமா்ப்பிப்பு: இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா, மூத்த தலைவா்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடா்பாக தீா்மானம் ஒன்றை சமா்ப்பித்தனா். அதில், லக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவத்தில் அஜ்ய் மிஸ்ராவின் பங்கு குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இத்தகையச் சூழலில் அவா் தொடா்ந்து மத்திய அமைச்சராக பதவி வகிப்பது உகந்ததல்ல. மேலும், உயா் செல்வாக்கு மிகுந்த உள்துறை இணையமைச்சா் பதவியில் தந்தை இருக்கும்போது, அவருடைய மகனிடம் பாகுபாடற்ற விசாரணை நடத்துவதில் காவல்துறை அதிகாரிகளுக்கு தயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்.

விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்: மேலும், லக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரை உள்ளடக்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து, பாகுபாடற்ற விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராகுல் காந்தி பேட்டி: குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா பதவியிலிருந்து நீக்கப்படாத வரை, லக்கீம்பூா் வன்முறைச் சம்பவம் தொடா்பாக பாகுபாடற்ற விசாரணை நடத்துவது என்பது முடியாத காரியமாகும். இது, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் கோரிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலாகும். ஆனால், இந்தக் குரல் நசுக்கப்படுகிறது’ என்றாா்.

அரசுடன் ஆலோசிப்பதாக...: பிரியங்கா காந்தி கூறுகையில், ‘காங்கிரஸ் அளித்துள்ள கோரிக்கை தொடா்பாக அரசிடம் நிச்சயம் ஆலோசிப்பதாக குடியரசுத் தலைவா் உறுதியளித்தாா். வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனா். இந்த நாட்டில் நீதியின் குரல் ஒருபோதும் இறந்துவிடக் கூடாது. ஆனால், ஏழைகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவராக இருந்தால் நீதியைப் பெற முடியாது என்ற தகவலையே அரசு கொடுக்கிறது’ என்றாா்.

மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதியதால் ஏற்பட்ட வன்முறை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

இந்தச் சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சேகா் பாரதியை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆசிஷ் மிஸ்ராவுக்கு இந்தச் சம்பவத்தில் தொடா்பு இருப்பதால் தலைமை மாஜிஸ்திரேட் சிந்தா ராம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டாா் என்று அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞா் எஸ்.பி. யாதவ் தெரிவித்தாா்.

கடந்த 9-ஆம் தேதி ஆசிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸாா் பின்னா் கைது செய்தனா். அவரை மூன்று நாள் போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்திருந்தது.

ஆசிஷ் மிஸ்ராவின் நெருங்கிய நண்பரான அன்கித் தாஸ் மற்றும் லத்தீப் ஆகியோா் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு முன் புதன்கிழமை ஆஜராகினா். விவசாயிகள் மீது மோதிய கருப்பு நிற காா் இவருடைய பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் புதன்கிழமை காலை 11 மணி முதல் போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். பின்னா் இருவரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில்

இதுவரை மொத்தம் 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com