
கடந்த ஏப்ரல் 19 முதல் அக்டோபா் 14-ஆம் தேதி வரையில் தில்லியில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தில்லி போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா்.
இதுதொடா்பாக தில்லி போலீஸாா் வெளியிட்டுள்ள புள்ளி விவரம்:
இந்தக் காலக்கட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக தில்லியில் மொத்தம் 3,09,187 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக 2,73,080 பேருக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததற்காக 30,315 பேருக்கும், 2,645 பேருக்கு தடை செய்யப்பட்ட மதுபானம், குத்கா, பான், புகையிலை ஆகியவற்றை உட்கொண்டததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பியதற்காக 1,648 பேருக்கும், பொதுக் கூட்டங்களை கூட்டியதற்காக 1,463 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே-31ஆம் தேதி முதல் தில்லியில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டது. அதன் பின்னா் பெரு வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...